Last Updated : 25 May, 2023 06:18 AM

 

Published : 25 May 2023 06:18 AM
Last Updated : 25 May 2023 06:18 AM

ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் வீணானது - கோவையில் பிரத்யேக ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டம் ரத்து

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் ஹாக்கி மைதானத்துக்காக அமைக்கப்பட்ட சிமென்ட் தளம். படங்கள்: ஜெ.மனோகரன் 

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பள்ளி வளாகத்தில் பிரத்யேக ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு பொது விளையாட்டு மைதானம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் ஹாக்கி விளையாட்டுக்கு என போதிய அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடிய பிரத்யேக மைதானம் இல்லை. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையில் உள்ள மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் ஒருபகுதியில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

100 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலத்தில், ரூ.2.25 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்க மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. மைதானத்தை சீரமைத்து சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு, சிறிய புள்ளி வடிவில் கருப்பு ரப்பர் துகள்கள் தூவப்பட்டன.

இதன் மீது சிந்தெடிக் தளம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், நிதிப் பற்றாக்குறையால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ரூ.24 கோடி மதிப்பில் புதிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.5 கோடி மதிப்பில் முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சிந்தெடிக் தளங்கள்
வீணாகிக் கிடக்கின்றன.

பின்னர், ரூ.19 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதை செயல்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக எந்த பணிகளும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டன. இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஹாக்கி மைதானத்தில் அமைப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்ட சிந்தெடிக் தளங்கள் சிதிலமடைந்து வீணாகி வருகின்றன.

இதுதொடர்பாக, ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, “கோவையில் ஹாக்கி விளையாட்டுக்கு என அரசு சார்பில் பிரத்யேக மைதானம் அமைத்துத் தர வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. இதை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது பணிகள் நிறுத்தப் பட்டுவிட்டன. பணியை மீண்டும் தொடங்கி விரைவாக முடித்துத் தர வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிந்தெடிக் தளங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன’’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும் போது, ‘‘தனியாக ஹாக்கி மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையின் மூலம், ஒரு விளையாட்டுக்கு மட்டும் என இல்லாமல், ஹாக்கி உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டுகளையும் உள்ளடக்கி பொது மைதானமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x