Published : 25 May 2023 06:05 AM
Last Updated : 25 May 2023 06:05 AM

கள் இறக்க அனுமதி தொடர்பாக விவசாயிகளிடம் கலந்தாலோசித்து முடிவு: வேளாண் அமைச்சர்

கோவை: கள் இறக்குவது குறித்து, தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு கண்காட்சியை திறந்து வைத்துள்ளேன். இக்கண்காட்சியில் பல்கலைக்கழகத்தின் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 28-ம் தேதி தருமபுரியில் இதேபோல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. இதில், 38.2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய வேண்டும் என நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய பயிர் ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய சிறுதானியங்கள் உள்ளிட்டவற்றின் பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தற்போது காணொலி வழியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், புதிய முயற்சியாக வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகளை அறிந்து பயிற்சி மேற்கொள்ள வசதியாக இத்திட்டம் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது பாராட்டக்கூடியதாக உள்ளது.

சிறு தானியங்களின் வளர்ச்சிக்காகவும், உற்பத்தியை அதிகரிக்கவும் தரமான விதைகள் உற்பத்தி உள்ளிட்ட செயல்பாட்டுக்காக ரூ.82 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள் இறக்க அனுமதி கோரும் தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x