Last Updated : 25 Oct, 2017 08:43 AM

 

Published : 25 Oct 2017 08:43 AM
Last Updated : 25 Oct 2017 08:43 AM

மழையில்லை, வேலைவாய்ப்பு இல்லை; அரசு, காவல்துறையின் உதவியும் இல்லாத சோகம்: கந்துவட்டியால் கருகும் ஏழை குடும்பங்கள்

அசிங்கமான வார்த்தைகளால் குடும்பத்தினரை திட்டுவது, மனைவி கண்முன்னே கணவரை அடித்து உதைப்பது, பான்பராக்கை மென்று வீட்டுக்குள் மட்டுமின்றி சோற்றுப்பானைக்குள் துப்புவது, வீட்டுக்குள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, பூந்தொட்டிகளில் சிறுநீர் கழிப்பது, குழந்தைகள் ஆசையாய் வைத்திருக்கும் பொம்மைகளை உடைப்பது. மீன் தொட்டிகளில் இருந்து மீன்களை எடுத்து வெளியே போட்டு துடிக்கச் செய்வது, வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டுவது என்றெல்லாம் கந்துவட்டிக்காரர்களின் துன்புறுத்தல்கள் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன.

கந்துவட்டி கொடுமை தாளாமல் கூலித்தொழிலாளி இசக்கிமுத்து தனது குடும்பத்துடன், தீக்குளித்ததில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், குழந்தைகள் மதிசாருண்யா, அட்சய பரணிகாவும் கருகி உயிரிழந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

தென்மாவட்டங்களில் நீறுபூத்த நெருப்பாக இந்த பிரச்சினை இன்னும் கனன்று கொண்டிருப்பதை இது மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறது.

பிழைப்புக்கு வழியில்லை

தமிழகத்தில் பெரிய அளவுக்கு தொழில், வேலைவாய்ப்புகள் இல்லாத பின்தங்கிய பகுதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் இருக்கின்றன. இம்மாவட்டங்களில் பிரதான தொழிலான விவசாயத்திலும் பெரும் பின்னடைவு காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் நிலவும் வறட்சியால் பிழைப்புக்காக பலர் வெளியூர்களுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது. கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இம்மாவட்டங்களில் பீடித் தொழிலாளர்கள் அதிகம் என்றாலும், இத்தொழிலும் நசிந்துள்ளது. விவசாயம், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் நலிவடைந்து வருவதால், தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தவும், பயிர் செய்யவும், குழந்தைகளின் கல்வி, திருமணத் தேவைகளுக்கும் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

கந்துவட்டி செழிப்பு

தொழிலாளர்களின் இல்லாமை, இயலாமையைத்தான் கந்துவட்டிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். பணம் தேவைப்படுவோரை, வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அழைத்துச் செல்லவும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது. அதையும் பணம் வாங்குவோரின் தலையில் கட்டிவிடுவார்கள்.

தொடக்கத்தில் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவுவது போல கடனுக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி தொழில்புரிவோர், மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என்றெல்லாம் சுரண்டுகிறார்கள். கந்துவட்டிக்கு ரூ.10 ஆயிரம் அசலாக கொடுக்கும்போதே ரூ.1,000 எடுத்துக்கொண்டு மீதியைத்தான் கொடுப்பார்கள். அடுத்த 10 நாளில் மீண்டும் ரூ.1,000 வட்டி கொடுக்க வேண்டும். இப்படியாக ஒரு மாதத்துக்கு வட்டி மட்டுமே ரூ.3 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். கட்டத் தவறினால் அதற்கும் ஒரு வட்டி என்று சாதாரண மக்களின் வருமானத்தை முழுவதுகாக கறந்துவிடுவது கந்துவட்டிக் காரர்களுக்கு கைவந்த கலை.

அசலுக்கும் அதிகமாக வட்டி

ஏதோ நம்பிக்கையில் கடன் வாங்குபவர்கள் ஆண்டுகள் கடந்தாலும் அசலை செலுத்த முடியாமல் மூச்சு திணறுகிறார்கள். வாங்கிய கடனில் அசல் அடைபடாமல், அசலுக்கும் அதிகமாகவே வட்டி செலுத்தும் நிலை பலரது வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. கந்துவட்டிக்காரர்கள் இவர்களை துரத்திக்கொண்டே செல்கி றார்கள்.

அரசு ஊழியர்கள்கூட இவர்களிடம் இருந்து தப்பவில்லை. வட்டி பணத்துக்காக வங்கி ஏடிஎம் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, மாதத் தொடக்கத்தில், கடன் பெற்றவர்களின் ஊதியத்தை எடுத்து வட்டிபோக மீதி பணத்தை கொடுக்கும் கொடூரமும் தென்மாவட்டங்களில் தொடர்கிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அசிங்கமான வார்த்தைகள்

வட்டி செலுத்தாவிட்டாலோ, வாங்கிய பணத்தை செலுத்தாவிட்டாலோ கந்துவட்டிக்காரர்கள் மனம், உடல்ரீதியாக துன்புறுத்துவது பதைபதைக்க வைக்கும். அசிங்கமான வார்த்தைகளால் குடும்பத்தினரை திட்டுவது, மனைவி கண்முன்னே கணவரை அடித்து உதைப்பது, பான் பராக்கை மென்று வீட்டுக்குள் மட்டுமின்றி சோற்றுப்பானைக்குள் துப்புவது, வீட்டுக்குள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, பூந்தொட்டிகளில் சிறுநீர் கழிப்பது, குழந்தைகள் ஆசையாய் வைத்திருக்கும் பொம்மைகளை உடைப்பது. மீன் தொட்டிகளில் இருந்து மீன்களை எடுத்து வெளியே போட்டு துடிக்கச் செய்வது, வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டுவது என்றெல்லாம் கந்துவட்டிக்காரர்களின் துன்புறுத்தல்கள் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கின்றன. உச்சகட்டமாக, குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அளிப்பது, அல்லது அவ்வாறு செய்வதாக மிரட்டல் விடுப்பது. இது எந்த மனிதனையும் கதி கலங்க வைக்கும்தானே!

பறிபோகும் சொத்துகள்

இதே வகையான துன்புறுத்தல்களைக் கையாண்டு சொத்துக்களை எழுதி வாங்கும் கொடூரம் இன்னமும் குறையவில்லை. இவ்வாறு கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி, வட்டி கொடுத்தே தேய்ந்துகொண்டிருக்கும் பலர், ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாமல் தங்களது வீடுகளையும், சொத்துகளையும் எழுதிக் கொடுத்துவிட்டு ஊரை காலி செய்வது அல்லது வாடகை வீடுகளுக்கு குடிபெயர்வது திருநெல்வேலி மாவட்டத்தில் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. கந்துவட்டிக்காரர்களின் துன்புறுத்தல்கள் குறித்து போலீஸார், மாவட்ட அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் போனதால்தான் தற்போது 3 உயிர்கள் கருகியிருக்கின்றன. பிரச்சினை உயர் அதிகாரிகளுக்கு செல்லும்போது மட்டும் கடமைக்கு வழக்கு பதிவு செய்யப்படுவதாக தெரிகிறது.

சட்டத்தால் பயனில்லை

தின வட்டி, மணி நேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரைமுறை இல்லா வட்டி தொகையை எவரேனும், அவரால் கொடுக்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டியாக வசூலிப்பது, தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி தடுப்பு சட்டம் 2003 பிரிவு 4-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். இந்த சட்டத்தின்கீழ் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

25tiarl_mathi sarunya மதிசாருண்யா right

போலீஸாருடன் கைகோப்பு

கந்துவட்டிக்காரர்களுடன் உள்ளூர் போலீஸார் கைகோத்து செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். கந்துவட்டி தொழிலில் ஈடுபடுவோர் பலர் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி ரீதியாக முக்கிய பிரபலங்களாக இருப்பதால் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கந்துவட்டிக்காரர்களிடம் தொடர்ச்சியாக போலீஸார் மாமூல் பெறுவதும் கந்துவட்டி கொடுமையை நீடிக்கச் செய்கிறது. கடன் வாங்கியவர்களுக்கு சாதகமாக பேசுவதுபோல செயல்படும் போலீஸார், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்தையே விற்று கந்துவட்டிக்காரர்களுக்கு கொடுக் கும் அளவுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தெரிகிறது. இதனால், சமீபகாலமாக தென்மாவட்டங்களில் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தற்கொலைகள் புதிதல்ல

பாளையங்கோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால், நகை தொழில் செய்யும் கோபால் ஆசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் சயனைடு தின்று தற்கொலை செய்துகொண்டனர். புளியங்குடியில் கடந்த 2012-ல் இரும்பு வியாபாரியின் குடும்பம் கந்துவட்டி தொல்லையால் தற்கொலைக்கு முயன்றது. சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் பள்ளி ஆசிரியர் பாபு இளங்கோ (48) என்பவர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். இதுபோல, கந்துவட்டியால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் என்று பெரிய பட்டியல் நீள்கிறது.

கந்துவட்டிக்காரர்களின் துன்புறுத்தல்களை தாக்குப்பிடிக்க முடியாமல்தான், பலரும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கின்றனர். அதேபோன்ற பரிதாபம் தற்போது மீண்டும் நடந்திருக்கிறது. கந்துவட்டி எனும் பெருந்தீ, பல ஏழைக் குடும்பங்களை உயிரோடு எரித்து, கருகவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைக்கு எப்போது முடிவுகட்டப்போகிறோம்?

6 மாதத்தில் 47 பேர் தற்கொலை

தீக்குளித்ததால் படுகாயம் அடைந்த இசக்கிமுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமை நிலவுவதற்கு இந்த தீக்குளிப்பு சம்பவமே சாட்சி. கடுமையான சட்டங்கள் இருந்தும் கந்துவட்டிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் கந்துவட்டிக் கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தில் 47 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றார்.

இசக்கிமுத்துவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேற்று முன்தினம் இரவு பார்த்து ஆறுதல் கூறினார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அரசு கைவிட்டதே காரணம்

25tiarl_Fire k.g.baskaran கே.ஜி.பாஸ்கரன்

கே.ஜி.பாஸ்கரன், எழுத்தாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்: திருநெல்வேலியில் கடந்த 2014 நவம்பரில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த கோபி என்பவர் கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பே அதே கும்பலால் தாக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார். அப்போதே, அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார். கந்துவட்டி கொடுமை தொடர்பாக போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் பல உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, மனு கொடுத்தவர்களுக்கே மிரட்டல் வரும் நிலைதான் உள்ளது. போலீஸாரும், அரசு அதிகாரிகளும் தங்களை கைவிட்டுவிட்டதாக கருதியதால்தான் கூலித்தொழிலாளி உயிரை மாய்க்கும் இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார். இது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட அவமானம்!

போலீஸ் அதிகாரி என்ன கூறுகிறார்?

திருநெல்வேலி சரக டிஐஜியாக கண்ணப்பனும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஆஸ்ரா கார்க்கும் இருந்தபோது, கந்துவட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கந்துவட்டி கொடுமைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. சமீபகாலமாக காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்காததால் கந்துவட்டிக்காரர்களின் அட்டகாசம் தொடர்கிறது. இதுபற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘‘கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் யார் யார் என அனைத்து காவல் நிலையங்களிலும் பட்டியலிட வேண்டும். பாதிக்கப்படுவோரிடம் இருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்துவதுடன், புகார் கொடுப்பவர்களுக்கான பாதுகாப்பை போலீஸார் உறுதி செய்ய வேண்டும். கந்துவட்டி கொடுமைக்காரர்களை கைது செய்து, அபகரித்த சொத்துகளை மீட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் தரவேண்டும்’’ என்றார்.

போலீஸ் நிலையங்களில் அதிக வழக்கு

25tiarl_Fire k.makesh கே.மகேஷ் right

க.மகேஷ், வழக்கறிஞர்: கந்துவட்டி தடைச் சட்டம் 2003-ல் நிறைவேற்றப்பட்ட பிறகும் கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி என மக்களை வாட்டும் கும்பல்கள் தடையின்றி இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. மக்களை சுரண்டி வதைத்து, கடனை வசூலிப்பதற்காக மிரட்டல், கடத்தல், சித்ரவதை போன்ற கிரிமினல் நடவடிக்கைகளிலும் இறங்கி, தற்கொலைக்குத் தள்ளும் இந்தக் கும்பல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. திருநெல்வேலி டவுன் போலீஸ் நிலையத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 10 கந்துவட்டி கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. 5 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலி மாநகரில் 9 காவல் நிலையங்களிலும் ஏராளமான வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்த வழக்குகளில் போலீஸார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் விபரீதங்களைத் தடுக்க முடியும்.

வங்கிகளில் மிஞ்சும் ஏமாற்றம்

25tiarl_Fire m.brito எம்.பிரிட்டோ

ம.பிரிட்டோ, மனித உரிமை ஆர்வலர், பாளையங்கோட்டை: கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அரசு வங்கிகள் மூலம், கிராமப்புற, ஏழை, எளிய மக்களுக்கு எளிதாக கடன் கிடைப்பதில்லை. அதனால், அவர்கள் தனிநபர்களிடம் கடன் வாங்குகின்றனர். சுயஉதவி குழுக்கள் மூலம் கடன் வழங்கப்பட்டாலும், அதிலும் பல முறைகேடுகள், பிரச்சினைகள் எழுகின்றன. வறுமையால்தான் மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை அரசு கவனத்தில் கொண்டு, வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது வெறும் கடன் பிரச்சினை அல்ல. இதன் பின்புலத்தில் வறுமை, அரசின் மெத்தனம், காவல்துறை அலட்சியம், வழக்கு விசாரணை தாமதம் என்று பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x