Published : 25 May 2023 06:10 AM
Last Updated : 25 May 2023 06:10 AM
சென்னை: வீடுகளில் மின்பயன்பாட்டைக் கணக்கெடுப்பதில் ஏற்படும் முறைகேடுகளை கண்டறிய மின்இணைப்புகளில் ஆய்வு செய்யுமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. அத்துடன், 100 யூனிட் இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போது வீடுகளில் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான வீடுகளில் குறைந்தபட்சம் 2 ஏசிகள் மற்றும் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வருவதால் வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
வீடுகளில் மின்நுகர்வு 500 யூனிட்டை தாண்டி செல்லும்போது மின்கட்டணம் அதிகரிக்கிறது. வீடுகளில் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கச் செல்லும் ஊழியர்கள் சிலர் மின்பயன்பாட்டைக் குறைத்துக் காண்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சில ஊழியர்கள் குறித்த காலத்தில் வீடுகளுக்கு மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்கச் செல்லாததால் அவர்களும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், மின்பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மின்வாரிய தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் கே.மலர்விழி, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மின்கணக்கீட்டின்போது முறையான கணக்கீட்டுக்குப் பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு செய்வதை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய சோதனை மின் அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT