Published : 25 May 2023 06:31 AM
Last Updated : 25 May 2023 06:31 AM
சிவகங்கை: தமிழகத்தில் நூலகத் துறையில் தாமதப் பதவி உயர்வால் பாதிக்கப்பட்ட 554 நூலகர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக போராடி வருகின்றனர்.
நூலகத் துறை மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கடந்த 1997முதல் 2000-ம் ஆண்டு வரை 554 பேர் ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவர்களைப் பதவி உயர்வு மூலம் 3-ம் நிலை கிளை நூலகங்களில் உள்ள நூலகர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்.
ஆனால், திடீரென பட்டுவளர்ச்சி, நெடுஞ்சாலைத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோரை நூலகர் காலியிடங்களில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், ஊர்ப்புற நூலகர்களைப் பதவி உயர்வு மூலமே 3-ம் நிலை கிளை நூலகங்களில் நியமிக்க வேண்டுமென, 2002 அக்.10-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், நூலகத் துறை ஊர்ப்புற நூலகர்களுக்குப் பதவி உயர்வு வழங்காமல் கிடப்பில் போட்டது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர், 2006 அக்.26-ம் தேதி பதவி உயர்வு அளித்து நூலகர்களாக நியமித்தது. நான்கு ஆண்டுகள் கழித்து தாமதமாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதால், அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்திலேயே சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தங்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க பாதிக்கப்பட்ட நூலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இது குறித்து பொதுநூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் ச.செல்வம் கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவிட்டும் நூலகத் துறை தாமதமாக பதவி உயர்வு வழங்கியதால் எங்களைப் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து நாங்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றமும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க பரிசீலிக்க அரசை அறிவுறுத்தியது.
ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். நூலகர்களின் நலன் கருதி, பதவி உயர்வுக்கான நீதிமன்ற உத்தரவு தேதி 2002 அக்.10-ஐ அடிப்படையாகக் கொண்டு எங்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT