Published : 24 May 2023 08:20 PM
Last Updated : 24 May 2023 08:20 PM
புதுச்சேரி: “புதுவையில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு புள்ளி பட்டியல் அடிப்படையில் பணியிட மாறுதல் கொள்கை வெளியிடப்பட்டது. ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த கொள்கையை அரசு திரும்பப் பெற வேண்டும். பணி மூப்பு அடிப்படையிலான பூஜ்ஜிய கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் பல்வேறு ஆசிரியர்கள், சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் சம்மந்தமாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடந்த 19-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
மீண்டும் இது சம்மந்தமான கருத்து கேட்டு கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் இன்று நடைபெற்றது. கல்வித்துறை செயலர் ஜவஹர், இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கூட்டத்துக்கு பின்னர் புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கூறும்போது, புள்ளி பட்டியல் அடிப்படையிலான பணியிட மாறுதல் கொள்கையில் நீங்கள் சுட்டிக்காட்டிய குறைகளை நீக்கவிட்டு, திருத்தம் செய்து செயல்படுத்தலாம் என்று முடிவு எடுத்துள்ளோம்.
மேலும் நகர்புறத்தில் பணிபுரிந்தால் ஒரு புள்ளி, கிராமத்தில் பணிபுரிந்தால் 2 புள்ளி, பிற பிராந்தியங்களில் பணி புரிவோருக்கு 3 புள்ளி என்ற அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கலாம். 55 வயது கடந்தவர்களுக்கு பிற பிராந்தியங்களில் பணியிட மாறுதல் செய்வது இல்லை. 57 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவையர் உள்ளிட்டோருக்கு அவர்கள் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்வது போன்ற திருத்தங்களை செய்து பணியிட மாறுதல் கொள்கை வெளியிட உள்ளோம். என்று அமைச்சர் கூறினார்.
இதனை 75 சதவீதம் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர். 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். அதன்பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அமைச்சரிடம் தெரிவித்துவிட்டோம். என்றார்.
இது சம்மந்தமாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, ‘‘ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்குள் ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக கிராமப்புறங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பணியிட மாறுதல் தர வேண்டும். காரைக்காலில் பணிபுரிபவர்கள் புதுச்சேரிக்கு மாற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில் புதிதாக புள்ளி பட்டியல் அடிப்படையில் பணியிட மாறுதல் கொள்கை ஒன்றை கல்வித்துறை சார்பில் வெளியிட்டோம். இந்த புதிய பணியிட மாறுதல் கொள்கையால் பாதிப்பு அதிகளவு உள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தனர்.
இது சம்மந்தமாக ஏற்கனவே அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் சில கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி அவர்கள் கூறிய மாறுதல்களை செய்துவிட்டு, மீண்டும் இன்று சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினோம். அப்போது அதில் யாருக்கும் பாதகம் இல்லாத முடிவை அரசு எடுத்துள்ளது என்று கூறியுள்ளோம். அதிலும் சங்கங்கள் சில குறைகளை சொல்லியுள்ளனர். அதுதொடர்பாகவும் யோசனை செய்து முடிவு செய்வதாக தெரிவித்துள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் பெங்களூரவில் இருந்து பாடப்புத்தகங்கள் வாங்கப்படும். புதுச்சேரியில் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு சம்மந்தமாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதுபோல் இருந்தால் தெரிவிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT