Last Updated : 24 May, 2023 08:03 PM

7  

Published : 24 May 2023 08:03 PM
Last Updated : 24 May 2023 08:03 PM

தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை; பொறுப்புடன் செயல்படுகிறேன்: ஆளுநர் தமிழிசை

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பதுச்சேரி: தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. ஆளுநர்களுக்கு உள்ள பொறுப்பைத்தான் நான் நடைமுறைப்படுத்தி வருகின்றேன் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து தரமான மருந்துகளும் இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகின்றோம். சுகாதார நிலையத்தில் எல்லா மருந்துகளும் தரமான நல்ல மருந்துகள் உள்ளன. காலாவதியான மருந்துகள் எதுவும் இல்லை. எல்லா ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றேன். முதல்வரிடமும் மருத்துவத் துறையில் புதுச்சேரி உன்னதமான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தை புதுச்சேரியில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் எல்லோருக்கும் டயாலிசிஸ் செய்யவும், ஏழைகளுக்கு இலவசமாக செய்யவும் நடவடிக்கை எடுக்கின்றோம். அதிக விலை கொடுத்து சிறுநீரக மருந்துகள் வாங்க வேண்டிய சூழல் இருக்கிறது. அதெல்லாம் குறைந்த விலையில் மருந்துகள் வாங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றோம்.

அரசின் எந்த கோப்பையும் நான் தாமதப்படுத்தியது இல்லை. முதல்வரை விட்டுவிட்டு, அமைச்சரவையின் முடிவு இல்லாமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்று சிலர் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் நான் 1,200 கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 17 கோப்புகளில் சில தகவல்கள் தேவை என்று திருப்பி அனுப்பியுள்ளேன். அரசின் எல்லா கோப்புகளும் மக்களுக்கான கோப்புகள். முதல்வர் மக்கள் நலன்சார்ந்த கோப்புகள் எதை அனுப்பினாலும், அதில் எந்த தடையும் சொல்வதில்லை. நானே தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை.

உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்து இங்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்கின்றனர். அதிகாரம் என்ற வார்த்தையை நான் என்றைக்கும் பயன்படுத்தியது கிடையாது. ஆளுநர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ, அந்த பொறுப்பைத்தான் நான் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஆளுநர்களுக்கு என்ன பொறுப்பு இருந்ததோ, அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் திடீர் என்று அதிகாரத்தை கையில் எடுத்துள்ளேன் என்று முன்னாள் முதல்வர் சொல்கின்றார். அதுபோன்று இல்லை. எப்போதும் உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. எனக்கு தனியாக அதிகாரம் வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எல்லாருடனும் பரிவோடும் இருந்து மகிழ்ச்சியோடு சேவை செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். தெலுங்கானாவில் என்னை விரட்டுவதாக கூறுகின்றனர். அதுபோல் எதுவும் இல்லை. நான் இரண்டு மாநிலத்துக்கும் சமமான பணியை ஆற்றி வருகின்றேன். முதல்வர் அறிவித்த மக்கள் நலன்சார்ந்த அறிவிப்புகள் எல்லாவற்றுக்கும் ஒப்புதல் கொடுத்துவிட்டேன். நான் எதற்கும் தடையாக இருந்தது இல்லை.

இப்போது சுமூகமாக நடக்கிறதே என்பது தான் சிலபேருக்கு கவலை. ஆளுநர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் அது உங்களுடைய உரிமை. ஆனால் நீங்கள் சொல்லும் அளவுக்கு சுயநலமாக நான் நடக்கவில்லை. முதல்வருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். அதுதான் மக்களுக்கு நல்லது நடப்பதற்கான வழிவகையாக இருக்கும். என்னை எதிர்த்து போராடுபவர்களை நினைத்து பரிதாபப்படுகின்றேன். ஆளுநரே வெளியேறு என்கின்றனர். என்னை வெளியேறு என்று கூற அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பு எவ்வளவு நாள் இருக்கின்றதோ, அதனை செம்மையாக செய்வேன். உள்ளார்த்தமாக மக்களுக்கு நான் நல்லதை செய்து கொண்டிருக்கின்றேன்.'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x