Published : 24 May 2023 05:53 PM
Last Updated : 24 May 2023 05:53 PM
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் உள் புகார் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தம் மற்றும் குறை தீர்வு) சட்டம் 2013, பிரிவு 4-ல் தெரிவித்துள்ளவாறு வேலையிடம் ஒன்றின் ஒவ்வொரு பணியமர்த்துநரும் எழுத்துருவிலான ஓர் உத்தரவினால் ”உள்ளமை முறையீடுகள் குழு” (Internal Complaints Committee) என அறியப்படும் குழு ஒன்றினை அமைத்தல் வேண்டும்.
அவ்வாறு அமைக்கப்படும் அந்த உள்ளமை குழுவின் உறுப்பினர்கள் கூறப்பட்ட சட்டம் பிரிவு 4-ல் தெரிவித்துள்ளபடி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்பொருள் குறித்து அவ்வப்போது நீதிமன்றங்கள் கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்தி, மேற்படி சட்டப்படிக்கான குழு உரிய அனைத்து இடங்களிலும் அமைத்திடுவதை உறுதி செய்திட அரசுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.
எனவே சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து பணி இடங்களின், பணியமர்த்துநர்கள், இச்சட்டத்தின் படி ”உள்ளமை முறையீடுகள் குழு” (Internal Complaints Committee) ஒன்றினை தத்தமது அலுவலகத்தில், பணியிடத்தில் இருப்பதை உடனடியாக உறுதி செய்துகொள்வதுடன், அது குறித்த தகவலை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு (மாவட்ட சமூகநல அலுவலகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-01.) தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு, இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில், இச்சட்டத்தின் கீழ் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT