Published : 24 May 2023 11:16 AM
Last Updated : 24 May 2023 11:16 AM

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28-ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். இந்தத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மே 28-ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

காங்கிரஸ் காட்டம்: முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு அழைக்கப்படவில்லை.

இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும். மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது" என்று கார்கே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x