Published : 24 May 2023 10:52 AM
Last Updated : 24 May 2023 10:52 AM
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி (நேற்று) முதல் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இரவு சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் ஆகியோர் வரவேற்றனர்.
இதன்பிறகு இன்று, சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
மேலும், செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் மற்றும் கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT