Published : 04 Oct 2017 09:52 AM
Last Updated : 04 Oct 2017 09:52 AM
மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில், பட்டுப்பூச்சியைக் கொல்லாமல் ‘அகிம்சா’ பட்டுப்புடவையைத் தயாரித்து அசத்துகிறது தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் அமைத்து, 1,000-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி, நெசவாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்குகிறது.
பட்டுச் சேலைகள் விற்பனையில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், நவீன டிசைன்கள் மட்டுமன்றி, பாரம்பரிய பட்டு கைத்தறி டிசைன்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பட்டுப்பூச்சியைக் கொல்லாமல் பட்டுப்புடவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டி.என்.வெங்கடேஷ், கோவை மண்டல மேலாளர் ஆர்.நடராஜன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வழக்கமாக பட்டுக்கூட்டை வெந்நீரில் மூழ்கச் செய்து, அதில் உள்ள புழுவைக் கொன்று, கூட்டில் இருந்து கிடைக்கும் பட்டுநூலைக் கொண்டு பட்டுப்புடவை தயாரிக்கப்படும். தற்போது, பட்டுப்புழுவைக் கொல்லாமல், அது பூச்சியாக மாறி, பறந்து செல்லும் வரை காத்திருந்து, பின்னர் அந்த பட்டுக்கூட்டில் இருந்து கிடைக்கும் நூலைக் கொண்டு பட்டுப்புடவைத் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம்.
பட்டுக்கூட்டை கிழித்துக் கொண்டு பூச்சி பறந்து செல்வதால், நூல் சீராக இருக்காது. எனவே, பட்டுக்கூட்டில் உள்ள பஞ்சை மீண்டும் நூற்று பட்டுநூலாக மாற்றி, அதில் புடவை தயாரிக்கிறோம். இந்த முறையில் கூடுதல் பணி என்பதால், புடவையின் விலை சற்று கூடுதலாக இருக்கும். நூல் கொஞ்சம் தடிமனாக இருப்பதால், புடவையின் எடையும் சற்றே அதிகமாக இருக்கும்.
ரூ.13 ஆயிரம் முதல் விற்பனை
மகாத்மா காந்தியின் அகிம்சை முறை அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்தப் புடவைக்கு ‘அகிம்சா’ பட்டுப்புடவைகள் என்று பெயர் வைத்துள்ளோம். காஞ்சிபுரம் மற்றும் ஆரணி அருகேயுள்ள அத்திமலைப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள் மூலம் ‘அகிம்சா’ பட்டுப்புடவை தயாரிக்கப்படுகிறது.
நடப்பாண்டு தீபாவளிக்கு இந்தப் புடவையை அறிமுகம் செய்துள்ளோம். ரூ.13 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கும் இந்தப் புடவைக்கு வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.
ரசாயனம் இல்லா சேலைகள்
இதேபோல, செயற்கை ரசாயனம் எதுவுமின்றி தயாரிக்கப்படும் ஆர்கானிக் சேலைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மத்திய அரசால் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பருத்தியால் நூற்கப்பட்ட நூலை வாங்கி, அதன்மூலம் புடவை தயாரிக்கப்படுகிறது.
அதில், செயற்கை வர்ணங்கள் எதுவுமின்றி, கடுக்காய், வாழை இலை, பல்வேறு வகையான பூக்களில் இருந்து கிடைக்கும் வர்ணங்களைப் பயன்படுத்தி, டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வகை பருத்தி ஆடை உடலுக்கு மிகவும் நல்லது. ஆர்கானிக் சேலைகள் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப் படுகின்றன.
ரூ.150 கோடிக்கு இலக்கு
இவை தவிர, மற்ற அனைத்து வகையான பட்டுப்புடவைகள், குறைந்த எடையிலான பட்டுப்புடவைகள், பருத்தி ஆடைகள், பல்வேறு வகையான சேலைகள், வேஷ்டிகள், சட்டைகள், போர்வைகள் உள்ளிட்ட அனைத்து ஜவுளி ரகங்களும் விற்கப்படுகின்றன. கைத்தறி ரகங்களுக்கு அரசே 30 சதவீத தள்ளுபடி வழங்குகிறது. லட்சக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நோக்கம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.136 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டில் ரூ.150 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT