Last Updated : 23 May, 2023 07:31 PM

2  

Published : 23 May 2023 07:31 PM
Last Updated : 23 May 2023 07:31 PM

தஞ்சாவூர் | ஒரே நாளில் 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா - பணிமாறுதலாகி செல்லும் ஆட்சியருக்கு பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு முறை ஒரே நாளில் 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் சேவையை பாராட்டி, அவர் பணிமாறுதலாகி செல்லும் நிலையில், சமூக நல அமைப்புகள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது பணியை முத்திரை பதிக்கும் விதத்தில் செயல்படத் தொடங்கினார். விளிம்பு நிலை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தனிக்கவனம் செலுத்த தொடங்கினார். அதன்படி மாவட்டத்தில் செங்கிப்பட்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி போன்ற பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியும், அதில் வீடு கட்டி, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து, அதற்கு செந்தமிழ் நகர் என பெயர்சூட்டி அவர்களுக்கு வீடுகளை வழங்கினார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

அதேபோல், தஞ்சாவூர் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் பூங்கா, 7டி திரையரங்கம், சமுத்திரம் ஏரி மற்றும் மனோரா மேம்பாடு என சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை தனது தனிப்பட்ட ஆர்வத்தை கொண்டு செயல்படுத்தினார்.

தஞ்சை மாவட்டத்தில் நஞ்சையில் உளுந்து என்ற சிறப்பான திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதிகபட்ச உளுந்து சாகுபடிக்கு வழிவகை செய்தும், ஏழை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு முறை, ஒரே நாளில் தலா 1,000 பட்டாக்களை வழங்கி தனது சேவையில் முத்திரையை பதித்தார்.

அதே போல் பல ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் இதர சலுகைகள் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில், அவர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று சாதிச் சான்றிதழை வழங்கினார். ஆதரவற்ற நிலையில் எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு சிறப்பு வீடு திட்டத்தின் கீழ் தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தது, மீனவ கிராமத்திற்கு மின்சார வசதி கிடைக்கச் செய்தது.

பாரத பிரதமர் பாராட்டிய தஞ்சை தாரகைகள் மகளிர் சுய உதவி குழு விற்பனையகம் அமைத்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைகளை பூர்த்தி செய்ய தொடர் முகாம்கள் நடத்தியது மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது, கிராம பள்ளிகளில் அகர நூலகம் அறிமுக படுத்தியது, துளிர் உலகம் என்ற நவீன அங்கன்வாடி ஏற்படுத்தியது, மாவட்ட ஊராட்சியின் மூலம் 26 புதிய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டியது, பள்ளிகளில் சத்துணவு காய்கறி தோட்டம் அமைத்தது, சிறுபான்மையினர் விதவைகளுக்கு தையல் பயிற்சி வழங்கி சுய தொழில் ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்தார்.

மேலும், வேளாண் வணிகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தியது, பல்வேறு சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டது, குறிப்பாக தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை மற்றும் குந்தவை நாச்சியார் கல்லூரி சாலை மேம்பாடு பணிகள் துரிதப்படுத்தியது, சத்திரம் நிர்வாகத்தின் வருவாயை அதிகரித்து அரசர் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள், சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் கலைக்கூடத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டது. கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக்க செயல்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு புதிய கட்டிடம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தியது, பார்வை குறைபாடு உடையோர் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தது, தஞ்சாவூரில் பத்திரிகையாளர்கள் மன்ற படிப்பகம் அமைத்தது முதலானவற்றை செய்தார்.

அத்துடன், தஞ்சாவூர் மாவட்டத்தின் புவிசார் குறியீடு பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தஞ்சாவூர், சென்னை மற்றும் பெங்களூர் மாநகரில் சிறப்பாக நடத்தியது, வீட்டுக்கு ஒரு விருட்சம், ஊருக்கு ஒரு வனம் தொடங்கி மாவட்ட ஆட்சியரகத்தில் 50 ஆண்டு கால ஆலமரத்தை வைத்தது வரை தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பளவை மேம்படுத்த பலவேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்தது, ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் குறைகளை கேட்டறிந்து பல்வேறு மனிதநேய உதவிகளை தனது சொந்த பொறுப்பிலும் நல்லோர் உதவியுடனும் செய்து வருவது என தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் அரசின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதோடு, மட்டுமல்லாமல் சமுதாய மேம்பாடு மற்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மாவட்ட ஆட்சியராக அவர்கள் செய்த பணிகள் ஏராளம். தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இன்றுடன் (மே 23) தனது பணியை திறம்பட முடித்து, சென்னைக்கு பணி மாறுதலில் செல்லும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், தன்னார்வ சேவை அமைப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் நேரில் சென்று தங்களது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x