Published : 23 May 2023 06:39 PM
Last Updated : 23 May 2023 06:39 PM

ஒரு ‘ஐபி’ முகவரில் இருந்து ஒரு டெண்டர்: பூங்கா பராமரிப்பு பணிக்கு புதிய விதிகளை வகுத்த சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பூங்கா

சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காக்களை பராமரிப்பு செய்யும் ஒப்பந்தாரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது. அதன்படி, ஓர் ஒப்பந்தாரர் 10-க்கு மேற்பட்ட பூங்காக்களை பராமரிப்பு செய்ய முடியாது.

சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்கள், 104 சாலை மையத்தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை புனரமைத்து சீரமைக்கும் பணிகள், தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தத்தெடுப்பு முறை மற்றும் பராமரிப்பு முறைகளில், தனியாருக்கு மாநகராட்சி ஒப்பந்தம் விடுகிறது.

தத்தெடுப்பு முறையில் பூங்கா பராமரிப்பு பணிகள் மேற்கொள்வோருக்கு மாநகராட்சி எவ்வித பராமரிப்பு தொகையும் தராது. அதேநேரம், பூங்காக்களில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர் விளம்பர பலகைகள் போன்றவை அமைத்து கொள்ளலாம். பராமரிப்பு முறையில் ஒப்பந்த பணி மேற்கொள்வோருக்கு, மாதந்தோறும் பராமரிப்புக்கான பணம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை ஒரே நபர் அதிகளவில் பராமரிப்பு ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் முறையாக பூங்காக்களை பராமரிப்பதில்லை என திமுக. கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினர். அதற்கு, பூங்கா பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பதற்கு புதிய வழிகாாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். அதன்படி, ஒரே ஒப்பந்தாரர் அதிகளவில் பூங்காக்கள் பராமரிப்புக்கு ஒப்பந்தம் கோர முடியாது என மாநகராட்சி பதிலளித்தது.

அதன்படி, கடந்த மாதம் 31-ம் தேதியுடன் பெரும்பாலான பூங்காக்களின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, பூங்கா பராமரிப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: “கடந்த முறை ஒரு ஒப்பந்தாரர் 60-க்கும் மேற்பட்ட பூங்கா பராமரிப்பு பணிகளை எடுத்து இருந்தார். இதை கட்டுப்படுத்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நிறுவனத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, ஒரு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்படும். அந்த தொகைக்கு உட்பட்ட மதிப்பு கொண்ட பூங்காக்களை மட்டும் தான் ஒப்பந்தாரர் எடுக்க முடியும். மேலும், ஒரு ஒப்பந்தாரர் 10 பூங்காக்களுக்கு மேல் எடுக்க முடியாது.

ஒப்பந்தாரரர்கள் ஒரு ‘ஐபி’ முகவரில் இருந்து ஓர் ஒப்பம் மட்டுமே கோர முடியும். பல ஒப்பம் கோரினால், ரத்து செய்யப்படும். மேலும், பூங்காவில் துாய்மை பணி மேற்கொள்ளுதல், புல்களை வெட்டுதல், கழிப்பறை துாய்மை, பசுமை பரப்பு போன்ற அடிப்படையில், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் அளிக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, அவர்களுக்கான பராமரிப்பு தொகை விடுவிக்கப்படும். அதேநேரம், பொதுமக்கள் குறைகளை குறிப்பிட்டு, அவை நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தால், ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அலட்சியம் காட்டினால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x