Published : 23 May 2023 05:45 PM
Last Updated : 23 May 2023 05:45 PM
சாத்தூர்: வெம்பக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் பகுதியில் நடைபெற்று வரும் தொல்பெருள் கண்காட்சியைப் பார்வையிடச் செல்லும் பொதுமக்களும் மாணவர்களும் அப்பகுதியில் தார் சாலை வசதி இல்லாததால் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மாதம் தொடங்கின. இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.
அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்றுவரும் 2ம் கட்ட அகழாய்வு பணியிலும் சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 13ம் தேதி மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தனர். அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட சுமார் 3,200 பழங்காலப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, வெம்பக்கோட்டையிலிருந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்காக இலவச பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அகழாய்வு நடைபெற்றுவரும் விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் சுட்டெறிக்கும் வெயியிலில் ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லை. குடிநீர் வசதி இல்லை. அதோடு, மெயின் ரோட்டிலிருந்து அகழாய்வு நடைபெறும் மேட்டுக்காட்டுக்கு இடையே சுடுகாடு உள்ளது. மேலும், சுமார் ஒரு கி.மீட்டர் தூரம் உள்ள இச்சாலை குண்டும் குழியுமாகவும் மண் தரையாகவுமே உள்ளது. சாலை வசதி இல்லாததால் இருசக்கர வாகனங்களில் வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவ, மாணவிகளையும் சிறுவர்களையும் அழைத்துவர பெற்றோர் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது.
எனவே, விஜயகரிசல்குளம் மெயின்ரோட்டிலிருந்து அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்றும், கண்காட்சியைப் பார்வையிட வருவோருக்கு குடிநீர் வசதி மற்றும் நிழலில் ஓய்வெடுக்கும் வகையில் குடில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் தொல்பொருள் கண்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT