Published : 23 May 2023 05:36 PM
Last Updated : 23 May 2023 05:36 PM
சென்னை: "தமிழகம் முழுவதும் உள்ள 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளரிளம் பருவத்தினருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு முகாம் வீதம் 25,524 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.2 கோடி வளரிளம் பருவத்தினர் பயனடைவார்கள்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வளரிளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர் பேசியதாவது: "இந்த முகாம்களில் 10 முதல் 19 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரான மாணவ மாணவியருக்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் ரத்த சோகை பாதிப்பை பொறுத்தவரை வளரிளம் பெண்களுக்கு 52.9%, வளரிளம் ஆண்களுக்கு 24.6% கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் ரத்த சோகை பாதிக்கப்பட்ட வளரிளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் ரத்த சோகை இல்லா தமிழ்நாடாக மாற்றுவதே இச்சிறப்பு முகாமின் நோக்கமாகும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முகாம் வீதம் 25,524 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.2 கோடி வளரிளம் பருவத்தினர் பயனடைவார்கள். இதில் பள்ளி மற்றும் பள்ளி செல்லா வளரிளம் பருவத்தினரும் அடங்குவர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மாணவ, மாணவிகள் பின்பற்றும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் மருத்துவரின் அறிவுறைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் ஊட்டியில் இரும்பு சத்து மாத்திரைகளை அதிக அளவில் ஒரு மாணவி எடுத்துக்கொண்டாதால், உடல் நலம் பாதிக்கப்பட்டார். எனவே ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்கள் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி மாத்திரைகளை மிக கவனமாக உட்கொள்ள வேண்டும்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT