Published : 23 May 2023 05:21 PM
Last Updated : 23 May 2023 05:21 PM
சென்னை: வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை விவரம்: மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
> கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமைச்சருமான ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
> திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
> மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.
> சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
> சேலம் - கே.என் நேரு; தேனி - ஐ.பெரியசாமி; திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு; தருமபுரி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தென்காசி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு; காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன்; திருநெல்வேலி - ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்; கோயம்புத்தூர் - செந்தில்பாலாஜி; பெரம்பலூர்- எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தஞ்சாவூருக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers ) மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT