Published : 23 May 2023 03:24 PM
Last Updated : 23 May 2023 03:24 PM
சென்னை: "பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நெல்லை வ.உ.சி மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021-ம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது.
இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா, 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு. பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தின் கேலரி மேற்கூரை ரூ.15 கோடியில், 8 மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. இந்தப்பணிகள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திருநெல்வேலியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ஆள்நடமாட்டம் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT