Published : 23 May 2023 05:45 AM
Last Updated : 23 May 2023 05:45 AM
சென்னை: விவசாய விளை நிலங்கள், நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளை அபகரிக்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சார்பில், முதல்வரின் தனிப் பிரிவில் நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் நிறைவு நாளில், அவசர கதியில் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விவசாயிகளின் உரிமைகள்: விவசாயிகளின் விளை நிலங்களையும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளையும், நீர்வழிப் பாதைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023”-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இந்த சட்டத்தால் விவசாயிகள்உரிமைகள் பறிபோவதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிர்வாக அதிகாரமும் அபகரிக்கப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக தமிழ்நாடுவிவசாயிகளையும், காந்தி கனவுகண்ட கிராம ராஜ்ஜியத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமாக உள்ளது.
வருத்தம்; ஏமாற்றம்: மேலும், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தையும் முறியடிக்கும் வலிமை பெற்றது. தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியையே அழிக்கக்கூடியதும், நீர்நிலைகளை அழிக்கக்கூடிய கொள்கை கொண்டதுமான, மோசமான இந்த சட்டம் பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.
மேலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாப்பதற்கு நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர்நிலைகளை பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சூழலில், இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது, அரசின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை முதல்வர் உணர வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT