Published : 23 May 2023 06:09 AM
Last Updated : 23 May 2023 06:09 AM
கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கோவை துடியலூரை அடுத்த எண்.22 நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடையை திறந்தால் மனித-விலங்கு மோதல் அதிகரிப்பதோடு, உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலால் துணை ஆணையருக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் நடமாடும் பகுதியான எண்.22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ஸ்ரீநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடையைத் திறக்க மும்முரமாக பணிகள் நடைபெற்று வந்தன. இந்த இடம் வன எல்லை அருகே உள்ளது. அத்துடன் அருகிலேயே குடியிருப்பு பகுதி, ஒரு பள்ளி, மகளிர் கல்லூரி இருப்பதால் மதுபான கடையை திறந்தால் குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு மதுபான கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 11-ம் தேதி விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, அங்கு மதுபானகடை திறப்பது நிறுத்திவைக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இச்செய்தியை சுட்டிக்காட்டி, மதுபான கடை அமைய உள்ள இடமானது யானைகள் நடமாடும் பகுதியாக உள்ளதா? என மாவட்ட வன அலுவலரிடம், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கலால்) சார்பில் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்துக்கு வனத்துறையினர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் மதுபான கடை அமைய இருந்த இடம் தடாகம் காப்புக்காட்டிலிருந்து சுமார் 1.20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இப்பகுதி யானைகள் மற்றும் இதர வன விலங்குகள் கோவை வனச்சரகத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கும், அங்கிருந்து கோவை வனச்சரகத்துக்கும் இடம்பெயர்ந்து செல்ல பயன்படுத்தும் வழிப்பாதையாகும். எனவே, அவ்விடத்தில் மதுபான கடையை திறக்க நேர்ந்தால் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்பட்சத்தில், மனித-விலங்கு மோதல்கள் அதிகரிக்க நேரிடும். இதனால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மக்கள் பயன்படுத்தி வீசும் மதுபாட்டில்களால், யானையின் பாதத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு, நாளடைவில் யானை உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் உயிரை பாதுகாக்கும் வகையிலும், மனித-விலங்கு மோதலை தவிர்க்கவும் மதுபான கடையை வன விலங்குகள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT