Last Updated : 25 Oct, 2017 12:34 PM

 

Published : 25 Oct 2017 12:34 PM
Last Updated : 25 Oct 2017 12:34 PM

திருச்செந்தூர் ஆன்மிக பயணத்தால் ஓங்கி ஒலிக்கும் சமத்துவம்: குமரியில் அனைத்து மத, இனத்தவருடன் பாரம்பரிய காவடிக் குழு

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆண்டுதோறும் குமரியில் இருந்து பாதயாத்திரையாக புறப்படும் காவடி ஊர்வலம் மிகவும் பிரசித்துவம் பெற்றது. மன்னர் காலத்தில் இருந்தே நடைபெறும் இந்த ஊர்வலம் ஆன்மிகப் பயணமாக மட்டுமின்றி.. சமத்துவத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யும் நிகழ்வாக நடைபெறுகிறது.

தென் மாவட்டங்களில் முருக வழிபாடு அதிகம். திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகக் கொண்டு இக்கோயிலுக்கு வாராந்திரம், மாதாந்திரம் செல்பவர்களும் அதிகம். ஆவணி, மாசி திருவிழாக்கள், தைப்பூசம், வைசாகி விசாகம், கந்த சஷ்டி போன்ற விழாக்களின் போது, பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று, நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் தென் மாவட்டங்களில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது.

குமரி மாவட்டத்தில், அனைத்து மதத்தவர், இனத்தவர்களைக் கொண்ட காவடிக் குழுக்கள் உள்ளன. குறிப்பாக, திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயிலில் இருந்து, திருச்செந்தூர் மாசி திருவிழாவுக்குச் செல்லும் காவடி ஊர்வலத்தால் கன்னியாகுமரி மாவட்டமே களைகட்டும்.

சாலையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் இரணியல், கண்டன்விளை, பரசேரி, தோட்டியோடு வழித்தடத்தில் வாகனங்கள் மாற்றி விடப்படும். 3-வது நாளில் திருச்செந்தூரை காவடிக் குழு சென்றடையும்.

ஊர் வாரியாக காவடிக் குழு

திங்கள்நகர், குளச்சல், பிலாகோடு, பெரிபள்ளி, தலக்குளம், நெய்யூர், திக்கணங்கோடு, கொக்கோடு, பெருங்கோடு, செட்டியார்மடம், லட்சுமிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இக்காவடிக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதுதவிர, கன்னியாகுமரி, நாகர்கோவில், மணவாளக்குறிச்சி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் என பல இடங்களில் இருந்தும் ஏராளமான காவடிக்குழுக்கள் திருச்செந்தூர் செல்வது வழக்கம். சூரிய காவடி, தேர் காவடி, புஷ்ப காவடி, பறக்கும் காவடி என பல்வேறு காவடிகளை இவர்கள் சுமந்து செல்கின்றனர்.

சர்வ மதத்தினரும்

தொலையாவட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆன்றோ (33), 41 நாட்கள் விரதம் இருந்து வேல்குத்தி திருச்செந்தூருக்கு செல்வதை கடந்த 12 ஆண்டுகளாக பின்பற்றுகிறார். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இவ்வாறு பாதயாத்திரை செல்ல முடியும் என்கிறார் அவர். திங்கள்நகர், மாறாம்பரம்பைச் சேர்ந்த, காவடிக் குழு தலைவர் ஆர்.மகேஷ் கூறியதாவது:

கூலி வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், உயர் பதவியில் இருப்போர் என அனைத்து தரப்பினரும் இக்காவடிக் குழுவில் உள்ளனர். ஜாதி, மதங்களைக் கடந்து பல ஆயிரம் பேர் திருச்செந்தூருக்கு நடைபயணம் செல்வது இக்குழுவின் தனிச்சிறப்பு. எங்கள் குழுவில் உள்ள திங்கள்நகரைச் சேர்ந்த நசீர் (35) மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். காவடி பயணத்துக்காக, குழுவில் உள்ளவர்கள் மாதம் 200 ரூபாய் சேமிக்கிறோம். பணம் இல்லாதவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்கிறோம்.

41 நாள் விரதம்

மாசி விழாவுக்கு முன் 41 நாட்கள் விரதம் இருப்போம். செக்கில் அரைத்து கிடைத்த நல்லெண்ணெயை காவடியில் சுமந்து எடுத்துச் செல்கிறோம். இதற்காக, இரணியலில் மாடுகளைக் கொண்டு செக்கில் ஆட்டும் எண்ணெயை பக்தர்கள் வாயில் துணிகட்டியவாறு, காவடி புறப்படும் இடத்துக்கு கொண்டு வருவர். விரதத்தின்போது பச்சரிசி சாதமும், புளி சேர்க்காத குழம்புமே சாப்பிடுவோம். எங்கள் காவடி குழுவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான புதியவர்கள் இணைகின்றனர், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x