Published : 22 May 2023 04:53 PM
Last Updated : 22 May 2023 04:53 PM
காரைக்கால்: தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர், உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோருவாரா என புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
காரைக்காலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''கர்நாடக தேர்தல் முடிவும் நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் பிரச்சாரம் எதையும் மக்கள் ஏற்கவில்லை. இது தேசிய அளவில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமர் ஏற்கெனவே அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியவில்லை. மறுமுறையாக தற்போது 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப்பெற செய்துள்ள நடவடிக்கை முட்டாள்தனமானது. 2000 ரூபாய் நோட்டு வெளியிடும்போதே இது தவறானது என காங்கிரஸ் கட்சி சொன்னது. பின் விளைவுகள் குறித்து சிந்திக்காமல் எடுக்கும் முடிவு ஆபத்தை விளைவிக்கும்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்தும், குறிப்பாக அரசு அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்குதான் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக, டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்து தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் உச்சநீதிமன்றத்தை மோடி அரசு அவமதித்துள்ளது. இதை எதிர்த்து கேஜரிவால் மேல் முறையீடு செய்யும்போது, அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என உறுதியாக சொல்கிறேன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், இத்தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்கிறார். இதன் மூலம் அவரின் அதிகார வெறியை உணர முடிகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்வதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த தீர்ப்பின்படி அவர் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் இத்தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநராக மட்டுமே உள்ள தமிழிசை தெலங்கானாவுக்கு செல்லாமல் இங்கேயே உள்ளார். அங்கே யாரும் இவரை மதிப்பதில்லை. புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள் ஏமாளிகளாக உள்ளனர் என்பதால் இங்கேயே இருக்கிறார்.
காரைக்காலில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது. இதுகுறித்து பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சருக்கு கவலை இல்லை. புதுச்சேரியில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. தமிழகத்துக்கு இங்கிருந்துதான் மது சப்ளை செய்யப்படுகிறது. முதல்வர் ரங்கசாமியின் ஆட்சியில் முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துவிட்டனர். ரெஸ்டோ பார் என்கிற திட்டத்தில் உரிமம் வழங்குவதில் ஒவ்வொரு பாருக்கும் ரூ.10 லட்சம் முதல்வருக்கு கொடுக்கப்படுகிறது என நேரடியாக நான் குற்றம் சாட்டினேன். அது குறித்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் வாய் திறக்கவில்லை.
புதுவையின் கலாசாரம் சீரழிந்துவிட்டது. கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 2 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். புதுச்சேரியில்தான் கள்ளச்சாராயம் பெருகியுள்ளது. அதனால் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டுமென்றால் புதுச்சேரி முதல்வர், உள்துறை அமைச்சர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பரா? இது ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்யும் பாஜகவின் இரட்டை வேடம். என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசை தூக்கி எறிகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை'' என்றார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.பி.சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT