Published : 22 May 2023 03:27 PM
Last Updated : 22 May 2023 03:27 PM
சென்னை: "தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக மின்துறை அமைச்சரே கூறும் நிலையில், என்எல்சி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தித் தராவிட்டால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறுவது ஏன்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தேவைக்கும் கூடுதலாக உள்ள மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதாகவும், கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 26 லட்சம் யூனிட் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.9.76 என்ற விலைக்கு சந்தை மூலம் விற்கப்பட்டிருப்பதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டின் மின்நிலைமை மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு வெளிச்சந்தையில் மின்சாரத்தை விற்பனை செய்யும் நிலைக்கு முன்னேறியிருப்பதில் எந்த வியப்புக்கும் இடமில்லை. காரணம்... தமிழ்நாட்டில் தமிழக அரசு, மத்திய அரசு, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தி நிறுவு திறன் 36,000 மெகாவாட் என்பதையும், தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்சாரத் தேவை 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை மட்டும் தான் என்பதை கடந்த ஓராண்டிற்கும் மேலாக தெரிவித்து வருகிறேன். தமிழகத்தின் மின்தேவை இன்னும் 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்தாலும் கூட அதை சமாளிக்கும் திறன் மின்வாரியத்திற்கு உண்டு.
ஆனால், எனது கேள்வி எல்லாம் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிய பிறகும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுத்து மிகக்குறைந்த அளவில் மட்டுமே மின்சாரத்தை வழங்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தை இன்னும் தமிழ்நாட்டிற்குள் ஏன் அனுமதிக்கிறீர்கள் என்பதுதான்? தமிழகத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஏராளமான மின்னுற்பத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 5000 மெகாவாட் அளவுக்கு அனல்மின்திட்டப்பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
2030ம் ஆண்டுக்குள் 15,000 மெகாவாட் அளவுக்கு நீர்மின்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இவை திட்டமிட்டவாறு செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரம் எப்போதுமே தேவைக்கும் அதிகமாகவே இருக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்தேவையுடன் ஒப்பிடும் போது என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு என்பது ஒதுக்கித் தள்ளக் கூடிய அளவுக்கு மிக மிக குறைவு தான். எடுத்துக்காட்டாக 19.05.2023 ஆம் நாளில், தமிழகத்தின் அதிகபட்ச மின்பயன்பாடு 17,389 மெகாவாட் ஆகும். இதில் என்எல்சி இந்தியாவின் பங்களிப்பு 407 மெகாவாட், அதாவது 2.34% மட்டும் தான். மின்தேவை 20% வரை அதிகரித்தால் கூட அதை எதிர்கொள்ளும் திறனும், கட்டமைப்பும் தமிழ்நாடு மின் வாரியத்திடம் இருக்கும் போது, என்எல்சி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் மின்சாரத்தை எண்ணி தமிழக அரசு கவலைப்பட வேண்டியதில்லை.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடலூர் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் என்எல்சி நிறுவனத்தின் முகவர்களாக மாறி, அதன் நலனை மட்டுமே பேசுவது ஏன்? தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக மின்துறை அமைச்சரே கூறும் நிலையில், என்எல்சி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தித் தராவிட்டால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறுவது ஏன்? உண்மையை மறைத்து மக்களுக்கு எதிராகவும், என்எல்சிக்கு ஆதரவாகவும் அரசு நிர்வாகம் செயல்படுவது ஏன்?
என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று பாமக போராடி வருவதற்கு முதன்மைக் காரணமே அது மக்களை சுரண்டுவதும்; இயற்கையை அழிப்பதும் தான். 66 ஆண்டுகளுக்கு முன் சாதாரணமான நிறுவனமாக தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனம், இப்போது ஆண்டுக்கு ரூ.12,500 கோடி வருவாய் ஈட்டும் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால், என்எல்சியின் இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ள நிலங்களை 66 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய மக்கள் வாழ்வதற்கு வீடும், பிழைப்பதற்கு வேலையும் இல்லாமல் உள்நாட்டு அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
என்எல்சியை வரவேற்று இடம் கொடுத்த கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றதால் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது; நிலக்கரியை எரிப்பதாலும், கொண்டு செல்வதாலும் ஏற்படும் நச்சு வாயுக்கள் மற்றும் மாசுக்களால் கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் நோய்களாலும், பிற கேடுகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். என்எல்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.
இப்போதும் கூட கடலூர் மாவட்ட மக்கள் அவர்களின் நிலங்களை தங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை என்று என்எல்சி கருதுகிறது. அதற்காக மாநில அரசின் துணையுடன் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டு, நிலங்களை பறிக்கிறது. நிலங்களைக் கொடுக்கும் மக்களுக்கு வேலை வழங்க முடியாது என்று அகங்காரத்துடன் கூறுகிறது. மக்களுக்கும் உண்மையாக இல்லாத, சுற்றுச்சூழலுக்கும் உண்மையாக இல்லாத என்எல்சி நிறுவனம் இனியும் தமிழ்நாட்டில் நீடிக்கத் தகுதியற்றது. எனவே, இன்னும் என்எல்சிக்காக ஏழை மக்களின் நிலங்களை பறிக்கும் அநீதியைத் தொடராமல், என்எல்சி நிறுவனத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT