Published : 22 May 2023 02:44 PM
Last Updated : 22 May 2023 02:44 PM

கருணாநிதி நூற்றாண்டு | அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து விரைவில் அரசாணை: முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

சென்னை: "கருணாநிதி நூற்றாண்டு விழாவை, பெரிய பெரிய விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக நடத்த வேண்டும். இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்தையும் இதற்கு பயன்படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத் துறை இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்போடும் எழுச்சியுடனும் கொண்டாடுவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக அமர்ந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர் தலைவர் அவர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய வாதங்களை எடுத்து வைத்தவர். இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்களை, துணைக் குடியரசுத் தலைவர்களை பல முறை தேர்ந்தெடுத்து அவர்களை அந்தப் பொறுப்புகளில் அமர்த்தியவர்.இந்தியாவின் பிரதமர்களை பல்வேறு முறை உருவாக்கியவர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல, இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் இருந்தார்.

முதல் முறை ஆட்சிக்கு வந்த போது, ''நான் முதல்வராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்" என்றார்.தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக அவர் சொன்னார். சமுதாய சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு, இவை மூன்றும்தான் அவருடைய ஆட்சியின் இலக்கணமாக அமைந்திருந்தது.அந்த இலக்கணத்தின் அடிப்படையில்தான் ஆட்சி செலுத்தினார். அதனால் அனைத்து துறைகளும் ஒருசேர வளர்ந்தது.

அன்னைத் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி தொடங்கி, ஏராளமான பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது வரை, இப்படி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி. அப்படிப்பட்ட தலைவருக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு கொண்டாடுவதற்கான ஆலோசனையில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.

அவரைப் பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுபவையாக இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம்.பெரிய பெரிய விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும். இன்றைய நவீன ஊடகங்கள் அனைத்தையும் இதற்கு பயன்படுத்த வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத் துறை இதில் முக்கியப் பங்காற்ற வேண்டும்.

அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும்.அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி, தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். நூற்றாண்டு விழா தலைமைக் குழு, விழாக் குழு, மலர்க்குழு, கண்காட்சிக்குழு போன்ற குழுக்கள் அமைச்சர்களை உள்ளடக்கி அமைக்கப்படும்.

இந்தக் குழுக்கள் தங்களுக்குள் அடிக்கடி கூடிப் பேசி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த கூட்டம் என்பது தொடக்கக் கூட்டம் தான். தொடர்ந்து நாம் பேசுவோம். இது குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.அதற்கேற்ற வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என்று முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x