Published : 22 May 2023 01:05 PM
Last Updated : 22 May 2023 01:05 PM
சென்னை: பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வடிவமைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வெளிவட்டச் சாலை, முடிச்சூரில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினையும், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கேசேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், "ரூ.2 கோடி செலவில் முடிச்சூர் சீக்கனான் ஏரியை மேம்படுத்துதல், அதோடு ரூ.1.50 கோடி செலவில் முடிச்சூர், ரங்கா நகர் குளத்தை மேம்படுத்துதல், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களுடைய பகுதியில் ரூ.2 கோடியில் பம்பல், ஈஸ்வரி நகரில், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலை மேம்படுத்துதல், ஆலந்தூர், புதுத்தெருவில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒரு திருமண மண்டபத்தை ஏற்படுத்தி தருதல் ஆகிய பணிகளை இன்றைக்கு மேற்கொள்ள இருக்கின்றோம்.
தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு உண்டான இடத்தை இன்று முடிச்சூர், சென்னை வெளிவட்டச் சாலையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என்று அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பது தொடர்பான கேள்விக்கு, "கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த முனையத்துக்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது என்னென்ன அடிப்படைத் தேவைகள் என்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கின்றபோது அந்த மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்தப் பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே, இந்தப் பேருந்து நிலையத்துக்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.
ஜூன் மாத இறுதிக்குள் இதை துவக்க வேண்டுமென்ற நிலைபாடு இருந்தாலும், பேருந்து முனையம் துவக்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும் விட்டுவிடாமல் மக்களுடைய பயன்பாட்டுக்கு வருகின்றபோது மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உண்டான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஜூன் மாதத்துக்குள் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை முடித்து, பேருந்து நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம் அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தைத் திறப்பதற்கு உண்டானப் பணிகள் குறித்து தொடர்ந்து தினம் தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் இத்துறை அதிகாரிகளுடன் இதுசம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, புதிது புதிதாக தேவைப்படுகின்ற கட்டுமானப் பணிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆகவே, குறிப்பிட்டக் காலத்துக்குள்ளாக வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைத்துத் தரப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT