Published : 22 May 2023 08:53 AM
Last Updated : 22 May 2023 08:53 AM

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்கள்: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடல்

ப.சிதம்பரம் | கோப்புப் படம்

சென்னை: ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்களோ, அடையாள அட்டையோ தேவையில்லை என்று எஸ்பிஐ அறிவித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த அறிவிப்பை முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, அந்த நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். எஸ்பிஐ அறிவிப்பு ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்போருக்கு சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மே 22) தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “சாமானிய மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லவே இல்லை. 2016-ல் அவை அறிமுகப்படுத்தப்பட்ட சில காலத்திலேயே சாமானிய மக்கள் அதனை புறக்கணித்துவிட்டனர். ஏனென்றால் அன்றாட சில்லறை புழக்கத்துக்கு ரூ.2000 நோட்டுகள் பயனற்றதாகவே இருந்தது. அப்படியென்றால் ரூ.2000 நோட்டுகளை யார் தான் வைத்திருந்தனர்? அதற்கான விடை உங்களுக்குத் தெரியும்.

ரூ.2000 நோட்டுகளை கருப்புப் பணத்தை ஒழிக்கவே கொண்டு வருகிறோம் என்ற பாஜகவின் உருட்டு இங்கே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ரூ.2000 நோட்டுகள் கருப்புப் பண பதுக்கல்காரர்கள் அவற்றை எளிதில் பதுக்கிவைத்துக் கொள்ள மட்டுமே உதவியது.

இப்போது ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக் கொள்ள சிவப்புக் கம்பளம் விரித்துள்ளனர். பாஜகவின் கருப்புப் பண ஒழிப்பு கொள்கை எங்கே போனது? 2016-ல் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதே முட்டாள்தனமான முடிவு. 7 ஆண்டுகளுக்குப் பின்னராவது அந்த முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எஸ்பிஐ அறிவிப்பு: ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, மே 23-ம் தேதி (நாளை) முதல் செப்.30 வரை பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாளொன்று ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ‘ரூ.2000 நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் முறையான படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் நகலை வழங்க வேண்டும்’ என சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நேற்று (மே 21) வெளியிட்ட அறிவிப்பில், "பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை. நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக்கொள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. இதனை முன்வைத்தே ப.சிதம்பரம் பதுக்கல்காரர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

அறிமுகம் செய்ததே இமாலய தவறு - முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை விலக்கிக்கொண்டது எனக்கு வியப்பு அளிக்கவில்லை. 500, 1000 ரூபாய் நோட்டுகளை கறுப்புப் பணமாகப் பதுக்குவார்கள் என்று காரணம் கூறித்தான் அதைச் செல்லாது என்று கூறினர். அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தனர். அது, இமாலயத் தவறு. 2,000 ரூபாய் நோட்டுகளை கறுப்புப் பணமாக பதுக்குவது மிக மிக சுலபம். அதை அறிமுகப்படுத்தும்போதே தவறான முடிவு என்று நாங்கள் கூறினோம்.

ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைத் திருத்திக் கொண்டனர் என்பது மகிழ்ச்சிதான். தற்போது, 2,000 ரூபாய் நோட்டு மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில்தான் புரள்கிறது. புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டுதான் உள்ளது. 2,000 ரூபாய் நோட்டு வெளிவந்தபோது சாதாரண மக்கள் அதைப் புறக்கணித்துவிட்டனர். சந்தையில் பயன்படுத்தவில்லை. அதன் விளைவாக, உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தால்கூட வியப்பு இல்லை.

சிந்திக்காமல் எடுத்த முடிவை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாது என்பர், செல்லும் என்பர். ஏனெனில், தற்போது துக்ளக் தர்பார் நடக்கிறது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x