Published : 22 May 2023 06:24 AM
Last Updated : 22 May 2023 06:24 AM
உதகை: மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் நிலையம்’ திட்டத்தின் கீழ், பாரம்பரியம் மாறாமல் உதகை, குன்னூர்ரயில் நிலையங்கள் புதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் அதிக வருவாய்,வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில், 1,275 ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக, அம்ரித் பாரத் நிலையம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம், ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, இலவச வைபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கெனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும்நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் உட்பட சுமார் 15 ரயில்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "மத்திய அரசின் அம்ரித் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் ஆகிய ரயில் நிலையங்களில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது.
2 கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளன. முதல்கட்டமாக, டெண்டர் விடுதல் உட்பட்ட நிர்வாகப் பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கும்.
அதன்படி உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில் நுழைவுவாயில், வெளியேறும் வாயில் என தனி தனி பகுதிகள் கட்டப்படஉள்ளன. ரயில் நிலையம் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
பயணிகள் காத்திருப்பு அறை மாற்றப்பட்டு, அங்கு தொலைக்காட்சி பொருத்தப்படும். உதகை மலை ரயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மற்ற ரயில் நிலையங்களைபோல் இல்லாமல் உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில் பாரம்பரியம் மாறாமல் பணிகள் நடைபெற உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT