Published : 21 May 2023 07:56 PM
Last Updated : 21 May 2023 07:56 PM
சென்னை: "தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கான பாதைக்கும் உந்து சக்தியாக விளங்கியது என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் தான் அதிக எண்ணிக்கையிலான சுதந்திர போராட்ட வீரர்களை தேசத்துக்கு வழங்கிய மாநிலம்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் போர் வீரர்கள், வீர மங்கைகள் ஆகியோர் பங்கேற்ற 'எண்ணித் துணிக' நிகழ்ச்சி சென்னை,ஆளுநர் மாளிகையில் இன்று (மே 21) நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவாது: "நான் தமிழ்நாடு ஆளுநராக வந்த பிறகு எந்த இடத்துக்கோ, மாவட்ட தலைநகருக்கோ சென்றால் அங்கே முன்னாள் ராணுவ வீரர்களை சந்திக்கும்போது அதை பெருமையாக கருதுவேன். அவர்களை சந்திக்க முன்னுரிமை கொடுப்பேன். அவர்களை சந்தித்துப் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பது மட்டுமின்றி அவர்களை சந்திப்பதன் மூலம் ஆளும் நிர்வாகத்துக்கும் ஒரு செய்தியை நான் வழங்குகிறேன். ஓய்வு பெற்ற வீரர்கள், நம் நாட்டின் மதிப்புமிக்க சொத்து, அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது என்ற செய்தியை நான் சொல்ல விழைகிறேன்.
ஒவ்வொரு கிராமத்திலும் எந்தெந்தப் பள்ளி அமைந்திருக்கிறதோ, அவற்றில் அந்தப் பகுதி அல்லது மாவட்ட வரம்பில் உயிரிழந்த ராணுவ வீரரின் படத்தை மாற்றி பெருமைப்படுத்துங்கள். அந்த வீரரின் உயிர்த்தியாக நாளில் அவருக்காக ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் அவர் பிறந்த ஊரும் கிராமமும் மாவட்டமும் பெருமைப்படும். மாணவர்கள், அவர்களின் படங்களைப் பார்த்து, இவர் எனது கிராமத்தைச் சேர்ந்தவர் என மார்தட்டி, அவரது வீரம் நிறைந்த தியாகத்தை நினைத்து பெருமைப்படுவர்.
இறந்த ஆன்மாவுக்கு நமது நன்றியை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழியாகும். இதற்கு பெரிய செலவு ஒன்றும் ஆகாது. இந்த யோசனைக்கு எதிர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை. தேசப் பணியில் ஒரு வீரர் தனது உயிரை தியாகம் செய்யும்போது இன்னுயிரை வழங்க அவர் தகுதியானவர் என்று அடையாளப்படுத்தி அவரை காலத்தால் அழியாதவராக நாம் மாற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சம் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் உள்ளனர். இது சிறிய எண்ணிக்கையல்ல. முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கங்கள் எண்ணிக்கையில் பலவாறாக இருக்கலாம். முன்னாள் படை வீரர்கள் சிறிய குழுவாக ஒரு அதிகாரியிடம் சென்று மனு கொடுக்கும்போது அதற்கு இருக்கும் தாக்கத்தை விட, ஒரு மிகப்பெரிய குழுவாக அல்லது அமைப்பாக அதே கோரிக்கை மனுவை ஒரு அரசிடம் வழங்கும்போது அதற்கான வலிமை அதிகமாகவே இருக்கும்.
தமிழ்நாட்டை தேசியவாதம் குறைவாக உள்ள இடமாக எங்கோ சிலர் கூறுகிறார்கள். அப்படி பேசியவர்கள் பற்றி நான் வியக்கிறேன். அவர்களின் கூற்று உண்மைக்கு வெகு தூரத்தில் உள்ளது. தேசப் பாதுகாப்பில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் தான் உள்ளது. நமது தேசிய சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருந்தது.
எல்லா இடங்களிலும் நமக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் உள்ளன. நீங்கள் அனைவரும் நேர்மறை சக்திகளின் அங்கம். நமது பலத்தை முதலில் நாமே உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். நிர்வாகத்திடம் சென்று தீர்வு கேட்பது யாசகம் கேட்பது போல அல்ல. உங்களுக்கான தேவையை பெற கோரிக்கை விடுப்பது உங்களுடைய உரிமை. அதற்கு தீர்வை வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.
நிர்வாகம் தன் கடமையைச் செய்யும் என்றாலும், இரண்டு லட்சத்துக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பெரிய குடும்பம் ஒன்றுகூடி டிஜிட்டல் முறையில் ஒன்றிணைந்தால் உங்கள் குரல் பலமாகும். இதை சாத்தியமாக்கினால் இது ஒரு 'பெரிய மாற்றத்தின்' தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலைத் தெரிந்துகொள்ள நான் விரும்பியபோது, ஆரம்பத்தில் எனக்கு நாற்பதுகளில் கூட இல்லாத சில பெயர்கள் வழங்கப்பட்டன. எனக்குள்ள பொறுப்புணர்வுடன் இதை இங்கே சொல்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள், நம் தேச விடுதலைக்காகப் போராடிய இடத்தை இங்கே நாம் காண்கிறோம். பொதுவெளியில் அதிகம் அறியப்படாத அந்த நிஜ நாயகர்களில் பாடப்படாத 100 நாயகர்களை முதல் நடவடிக்கையாக நாங்கள் முன்னிலைப்படுத்தத் தொடங்கியுள்ளோம்.
வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் போன்ற பெரும் சுதந்திர நாயகர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இவர்களை போல தியாகம் செய்த பலர் இன்னும் நமக்குத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகைய அறியப்படாத மற்றும் பாடப்படாத நாயகர்களை நமது பல்கலைக்கழகங்களின் இளம் மற்றும் ஆர்வமுள்ள ஆராய்ச்சி அறிஞர்கள் அடையாளம் அடையாளம் கண்டு வருகின்றனர். இந்தப் பணியை நமது ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். பாடப்படாத நாயகர்கள் பட்டியல் பல ஆயிரம் பேரைக் கடந்து செல்வதால் நமது ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி தொடரும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கான பாதைக்கும் உந்து சக்தியாக விளங்கியது என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் தான் அதிக எண்ணிக்கையிலான சுதந்திர போராட்ட வீரர்களை தேசத்துக்கு வழங்கிய மாநிலம். சுதந்திரத்திற்காக முப்பதாயிரம் இன்னுயிரை ஒரு மாநிலம் கொடுத்திருப்பது போல இந்தியாவில் எந்தவொரு மாவட்டமோ, மாநிலமோ செய்திராத தியாகம் என்று நான் நினைக்கிறேன். எனவே, நமது மாநிலத்தை தேசியவாதம் குறைவாக உள்ள இடமாக இனி எவரேனும் சொன்னால் அவர் பொய் உரைக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT