Last Updated : 21 May, 2023 06:18 PM

4  

Published : 21 May 2023 06:18 PM
Last Updated : 21 May 2023 06:18 PM

மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததே இமாலய பிழை: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்ட காங்கிரஸார்.

காரைக்குடி: மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததே இமாலய பிழை. அதை 7 ஆண்டுகளுக்கு பின்னர் திருத்திக் கொண்டனர் என்பது மகிழ்ச்சி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதனை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். \

பின்னர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''மத்திய அரசு 2,000 ரூபாய் நோட்டுகளை விலக்கிக் கொண்டது எனக்கு வியப்பு அளிக்கவில்லை. 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கருப்புப் பணமாக பதுக்குவார்கள் என்று காரணம்காட்டி, அதை செல்லாது என்று கூறினர்.

அதோடு 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததே இமாலய பிழை. 2,000 ரூபாய் நோட்டுகளை கருப்புப் பணமாக பதுக்குவது மிகமிக சுலபம், அதை அறிமுகப்படுத்தும்போதே தவறான முடிவு என்று நாங்கள் சொன்னோம். அதை 7 ஆண்டுகளுக்கு பின்னர் திருத்திக் கொண்டனர் என்பது மகிழ்ச்சி. தற்போது 2,000 ரூபாய் நோட்டு மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள், மொத்த வியாபாரிகள் கையில் தான் உள்ளது. புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டு தான் உள்ளது. மேலும் 2,000 ரூபாய் நோட்டு வந்தபோது சாதாரண மக்கள் புறக்கணித்துவிட்டனர். சந்தையில் பயன்படுத்தவில்லை.

அதன் விளைவாக உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டையும் அறிமுகம் செய்தால் கூட வியப்பு அடையமாட்டேன். சிந்திக்காமல் எடுத்த முடிவை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். மக்கள் ஏற்று கொள்ளாத ரூபாய் நோட்டுகளை வெளியிடக்கூடாது. ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாது என்பர், செல்லும் என்பர் ஏனெனில் தற்போது துக்ளக் தர்பார் அல்லவா நடைபெறுகிறது.'' இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x