Published : 21 May 2023 05:35 PM
Last Updated : 21 May 2023 05:35 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்த நிலையில் வட்டாட்சியரை டாஸ்மாக் கடைக்குள் வைத்து பூட்ட பொதுமக்கள் செய்த முயற்சி போலீஸரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் கீழவாசலில் இயங்கி வரும் தற்காலிக மீன்மார்க்கெட் எதிரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையையொட்டி அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பாருக்கு இன்று காலை 11 மணி அளவில் தஞ்சாவூர், கீழவாசல், படைவெட்டி அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர் மது குடிக்கச் சென்றனர்.
ஆனால் டாஸ்மாக் கடை 12 மணிக்கு தான் திறக்கப்படும் என்பதால், அருகிலிருந்த பாரில் விற்பனை செய்வதாக கூறப்பட்டது.
இதனையறிந்த குப்புசாமி, அங்கு சென்று மது அருந்தி விட்டு எதிரே உள்ள மீன் வியாபாரம் செய்யும் இடத்திற்கு வந்தார். அப்போது அவரது வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி அந்த இடத்திலேயே விழுந்தார். அப்போது அங்கு மீன் வாங்குவதற்காக வந்த குப்புசாமியின் மனைவி, அவரை ஆட்டோவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் குட்டி விவேக் , அதே பாரில் மது அருந்தி விட்டு, பாரை விட்டு வெளியே வந்த போது, அதே இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையறிந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில் குப்புசாமி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். குட்டி விவேக் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் போலீஸாரும் அங்குக் குவிக்கப்பட்டனர். மேலும், தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலால் அதிகாரி பழனிவேல், வட்டாட்சியர் சக்திவேல், டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2 பேரும் அந்த டாஸ்மாக் அருகிலுள்ள பாரில் மது அருந்தியது தெரிய வந்தது. மேலும், அவர்கள் டாஸ்மாக் பாரில் வழங்கிய மது போலியானதா அல்லது வேறு எதுவும் காரணமா இருக்குமா என்றும், 11 மணியளவில் மது விற்பனை செய்தது குறித்தும், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அங்குத் திரண்டு இருந்த பொதுமக்கள் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கியதால், அவருக்கு மூக்கில் ரத்தகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அங்கிருந்த டாஸ்மாக் வட்டாட்சியர் தங்கபிரபாகரனை, டாஸ்மாக் கடைக்குள் வைத்துப் பூட்ட முயன்றனர். அவர்களிடம் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அமைதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த டாஸ்மாக் கடையை போலீஸார் பூட்டினர். மேலும், அந்தப் பகுதியை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. அனுமதி பெற்று இயங்கி வந்த பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT