Published : 21 May 2023 04:27 PM
Last Updated : 21 May 2023 04:27 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வரவேண்டும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
ஜி-20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி 20 நாடுகளில் இன்று மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்கான தீர்வுகளை கண்டறியவும், இது தொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்தியாவில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலமாக அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமத்துடன் இணைந்து கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். முன்னதாக, உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர், "கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. இதுபோன்ற ஆபத்துக்களைக் குறைக்க தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
'தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. "சுத்தம் சோறு போடும்" என்று தமிழில் பழமொழியும் உண்டு. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் "கடற்கரையை சுத்தப்படுத்தும்" திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். " என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், தேசிய மாணவர்ப் படை மற்றும் மாணவ - மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியைத் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT