Published : 21 May 2023 05:51 AM
Last Updated : 21 May 2023 05:51 AM

மாணவர்களுக்கு சீருடை, புத்தக கட்டணம் வழங்குவது அரசின் கடமை - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப் புத்தக கட்டணத்தை, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவைச் சேர்ந்த மகாராஜா என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கட்டணம் செலுத்த உத்தரவு: கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எனது மகன் சுவேதனை சேர்த்தேன். ஆனால் பள்ளி நிர்வாகம் சீருடை மற்றும் பாடப் புத்தகங்களுக்காக ரூ.11,977-ஐ கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதால், எந்தக் கட்டணமும் இல்லாமல் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

புகார் அளித்தும் நடவடிக்கையில்லை: ஆனால், அதன் பிறகும் எனது மகனுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘‘கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மட்டுமின்றி, கல்வி கற்கத் தேவையான சீருடை, பாடப் புத்தகங்கள் போன்றவற்றுக்கான செலவினங்களையும் மாநில அரசு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான சீருடை, பாடப் புத்தகங்களுக்கான கட்டணங்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

இது தொடர்பான உரிய அறிவுறுத்தல்களை, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பிறப்பிக்க வேண்டும். அதேபோல, தனியார் பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் பெற்றோரிடம் எந்த நிர்பந்தமும் செய் யக்கூடாது.

மனுதாரரின் மகனுக்குத் தேவையான சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x