Published : 21 May 2023 06:06 AM
Last Updated : 21 May 2023 06:06 AM

தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்கள் பறிமுதல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2020 மார்ச் 31-க்கு பிறகு நாட்டில் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றின் பதிவை ரத்து செய்யும் நடைமுறையை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், அந்த காரை விடுவிக்க உத்தரவிடக் கோரியும் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 2020 நவ.1-ம்தேதி முதல் 2022 செப். 22 வரை மோசடியாக 290 பிஎஸ்-4 ரகவாகனங்கள் பதிவு செய்யப்பட் டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஆவணங்களை திருத்தி பிஎஸ் 4 ரக வாகனங்களை மோசடியாக பதிவு செய்ததன் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் துணையின்றி இந்த மோசடி நடந்திருக்காது என்பதால், இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்களின் விவரங்களை போலீஸாருக்கு வழங்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய முடியும் என்றும், இந்த மோசடியில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு விரைந்து விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதி, மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒப்படைக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கவும் டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x