Published : 21 May 2023 06:16 AM
Last Updated : 21 May 2023 06:16 AM

பொதுவான பணி நிலை வரம்பில் ரேஷன் பணியாளர்கள்: சாதக - பாதகங்களை ஆராய குழு அமைப்பு

திருச்சி: கூட்டுறவுத் துறையின்கீழ் பணியாற்றும் ரேஷன் கடை பணியாளர்களை பொதுவான பணி நிலை வரம்புக்குள் கொண்டு வருவதால் ஏற்படும் சாதக- பாதகங்கள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணிப் பரவல் முறையிலும் மற்றும் அயல் பணி முறையிலும் இருப்பிடங்களிலிருந்து 40 கி.மீ முதல் 90 கி.மீ தொலைவு வரை உள்ள சங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணியிடம் தொலைவில் அமைந்துள்ளது, பணிச்சுமை மற்றும் அலைச்சல் காரணமாக மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆனால், அதேநேரம், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் போன்ற பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதற்குப் பதிலாக, தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களை பொதுவான பணி நிலை வரம்புக்குள் (Common Cadre) கொண்டு வந்ததுபோல, ரேஷன் கடை பணியாளர்களையும் இந்த வரம்புக்குள் கொண்டு வந்து, மாவட்டத்துக்குள்ளேயே (கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் ரேஷன் கடைகள் உட்பட) மாறுதல்கள் அளித்து, இருப்பிடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவுக்குள் காலியாக உள்ள சங்கங்களில் பணியமர்த்தம் செய்ய வேண்டும் என பல்வேறு பணியாளர் சங்கங்களால் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரேஷன் கடைப் பணியாளர்களை பொதுவான பணி நிலை வரம்புக்குள் கொண்டு வருவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து பரிசீலித்து பரிந்துரைக்க குழு ஒன்றை அமைத்து, மே 30-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மண்டல இணைப் பதிவாளர் சி.சீனிவாசனை தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் இணைப் பதிவாளர்கள் எஸ்.ராமதாஸ் (தருமபுரி), கே.பாண்டியன் (பெரம்பலூர்), தி.ஜெயராமன் (திருச்சி), ஏ.தயாள விநாயகன் அமுல்ராஜ் (மயிலாடுதுறை) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைப் பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பா.தினேஷ்குமார், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பொதுவான பணி நிலை வரம்புக்குள் ரேஷன் கடைப் பணியாளர்களை கொண்டு வர வேண்டும் எனதொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதனால், ரேஷன்கடைப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் எளிதாகும்.

இக்குழுவினர் தொழிற்சங்கங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதையும் அறிக்கையில் சேர்க்க வேண்டும். பொதுவான பணி நிலை வரம்புக்குள் ரேஷன் கடைப் பணியாளர்களைக் கொண்டு வந்து, அரசே நேரடியாக ஊதியம் தர வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x