Published : 20 May 2023 01:14 PM
Last Updated : 20 May 2023 01:14 PM
சென்னை: சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT