Published : 20 May 2023 12:51 PM
Last Updated : 20 May 2023 12:51 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாங்கனிகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். இங்கு அரசு நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களின் அரசாக மாறியுள்ளது என்று மா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை மா விவசாயிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் கே.எம்.சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இம்மாவட்டத்தில் விளையும் மாங்கனிகளை நம்பியே, மாங்கூழ் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது, மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொடர்ந்து மா விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மகசூல் தரும் மா மரங்களை பராமரிப்பது மிகவும் கடினமாகவும், அதிக செலவும் செய்ய வேண்டியுள்ளது. பூச்சித் தாக்குதல், பருவநிலை மாற்றம் என 5 ஆண்டுகளாக மகசூல் பாதிக்கப்பட்டு வருகின்றது. மகசூல் பாதித்தாலும், மாங்கனிகளுக்கு சிண்டிகேட் மூலம் விலை நிர்யணம் செய்வதால், விவசாயிகளுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மா கொள்முதல் விலை குறைப்பு
இவ்வாறான நிலையில், நிகழாண்டில், கடந்த மாதம் முதல் முதிர்ச்சியடைந்த மாங்கனிகள் அறுவடை செய்யப்பட்டு, மாங்கூழ் தொழிற்சாலைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் 1 கிலோ மாங்கனிக்கு 20 ரூபாய் என்கிற விலையில், மாங்கூழ் அதிபர்கள், மா விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். விவசாயிகள் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி நடந்த, முத்தரப்பு கூட்டத்தில், ஒரு கிலோவிற்கு 20 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்த்துங்கள் என ஆட்சியரும் அறிவுறுத்தினார். ஆனால் மாவிற்கான விலையை உயர்த்துவதற்கு பதிலாக விலையை குறைத்து வருகின்றனர். மாங்கூழ் தொழிற்சாலைகளின் சங்கத் தலைவர் ஒரு கிலோ 12 ரூபாய் என்பதே பெரிய விலை என்கிறார். இதனால் மா விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். உள்ளூர் மாவிவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், வெளிமாநில மா விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தமிழக அரசுக்கு எட்டுவதில்லை
கிருஷ்ணகிரி மாங்கனிகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். இங்கு அரசு நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களின் அரசாக மாறியுள்ளது. சர்வாதிகாரப் போக்கால் மா விவசாயிகளை நசுக்குகின்றனர். மா விவசாயிகளின் கோரிக்கைகளான உரிய விலை, மகசூல் பாதிப்பிற்கு நிவாரணம், அரசே மாங்கூழ் தொழிற்சாலைகளை ஒன்றியம் தோறும் அமைத்து, கிருஷ்ணகிரி மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், மாங்கூழ் அதிபர்களைத் தாண்டி தமிழக அரசுக்கு எட்டுவதில்லை.
அடிமாட்டின் விலை நிர்ணயம்
கடந்த 20 ஆண்டுகளாக மா விவசாயிகள் சுரண்டப்பட்டுள்ளனர். மா விவசாயிகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மோசமான சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம், அகில இந்திய மாங்கனி கண்காட்சியை கிருஷ்ணகிரியில் நடத்துவது விவசாயிகளுக்கு பயனளிக்காது. கிருஷ்ணகிரி மா விவசாயிகள் சென்ற ஆண்டும் ஏமாற்றப்பட்டனர். மற்ற மாநில விவசாயிகளுக்கு ஒரு கிலோ 100 என்ற விலை வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு அடிமாட்டின் விலை நிர்ணயிப்பது ஏன்? எனவே கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் மாங்கனிக் கண்காட்சியை புறக்கணிக்கின்றோம். சர்வாதிகார போக்குள்ள மாங்கூழ் அதிபர்களிடமிருந்து, தமிழக முதல்வர் மா விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT