Published : 20 May 2023 05:27 AM
Last Updated : 20 May 2023 05:27 AM
சென்னை: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலைப் படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜி எச்எஸ்) ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு சுற்றறிக்கை: இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு, ஆன்லைன் மூலம் பொது கலந்தாய்வு நடத்தமுடிவு செய்திருப்பதாக கடந்த மார்ச் 13-ம் தேதி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமை ஆகும். மாநிலஉரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கடந்த ஆண்டு நடைமுறையைப் பின்பற்றி, இந்த ஆண்டும் மருத்துவப்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT