Published : 20 May 2023 06:05 AM
Last Updated : 20 May 2023 06:05 AM

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதால் சாமானியருக்கு பாதிப்பு இல்லை: பொதுமக்கள், வணிகர் சங்கம் உள்ளிட்டோர் கருத்து

சென்னை: நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும், பொதுமக்கள் செப்டம்பர் 30-க்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. | வாசிக்க > ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் - இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு | முழு விவரம் | இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

எம்.தியாகராஜன் (தலைவர், கோயம்பேடு மலர், காய், கனி, வியாபாரிகள் நலச்சங்கம்): நாங்கள் ரூ.1 லட்சத்துக்கு வியாபாரம் செய்தால், அதில் எப்போதாவது ஒன்றிரண்டு நோட்டுகள் மட்டும்தான் ரூ.2000 ஆக வருகிறது. காய்கறி கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் யாரும் ரூ.2000 நோட்டை கொண்டு வருவதே இல்லை. அதனால் இந்த அறிவிப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஜே.ராபர்ட் (பொதுச்செயலாளர் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்): ரூ.2000 நோட்டு அறிமுகமான போதே இது பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்றே தெரிவித்தோம். அதன்படி ரூ.2000 நோட்டுகள் தற்போது பெருமளவில் முதலாளிகள் வசமே உள்ளன. அந்த நோட்டை பார்த்தே நீண்டகாலமாகிவிட்டது. இந்த அறிவிப்பின் மூலம் பதுக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் வெளியே வந்துவிடும். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மனீஷ் (ஐடி ஊழியர்): எங்களைப் போன்ற நடுத்தர வகுப்பினர் பெரும்பாலும் ரூ.2000 நோட்டை வைத்து கொண்டு சில்லரைக்கு அலைய வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது. அதனால் ரூ.2000 நோட்டுகளாக பணத்தை சேமித்து வைப்பதே இல்லை. எனவே தற்போது ரிசர்வ் வங்கி, அந்த நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவால் நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மேலும் அவகாசம் வேண்டும்

ஏ.எம்.விக்கிரமராஜா (தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு): மதிப்பு அதிகம் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டால் அதை பதுக்குவார்கள் என்று கூறித்தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்கள். அப்போதே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிட்டால் என்ன விளைவு ஏற்படும் என வல்லுநர்களை நியமித்து மத்திய அரசு ஆய்வு செய்திருக்க வேண்டும்.முன்பு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, ஏழை மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை வணிகர்களிடம் கொடுத்து தான் மாற்றினார்கள். இதனால் வணிகர்களும் வருமானவரித்துறை விசாரணைக்கு உள்ளானார்கள். ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை மாற்றுவதற்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்க கோருகிறோம்.

கே.பாலன் (பொதுச்செயலாளர், பாரதிய மஸ்தூர் சங்கப் பேரவை): ஏழை மக்களிடமோ, ஏடிஎம்மிலோ எங்குமே ரூ.2 ஆயிரம்நோட்டு புழக்கத்தில் இல்லை. அந்தபணத்தை திரும்பப் பெறுவதால் சாமானியனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசியல்வாதிகள் தான் அதனை பதுக்கி வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு அவர்களைத்தான் அச்சத்துக்கு உள்ளாக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணம் வெளியில் வரும். அதனால் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன்.

சி.பி.கிருஷ்ணன் (அகில இந்திய இணைச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்): பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வந்த போது உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அகற்றுவதாகக் கூறி விட்டு, பின்னர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதே நகை முரணாக இருந்தது. ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

டி.நிக்சன் (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்): ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஏற்கெனவே புழக்கத்தில் அதிகமாக இல்லை. ஏடிஎம்களிலும் கூட ரூ. 2ஆயிரம் நோட்டுகள் வருவது கிடையாது. ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை முடக்குவதால் ஏழை, சாமானிய மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது. மத்திய அரசின் இந்த முடிவு நிச்சயமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும். அதிகளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் இது சிக்கலை ஏற்படுத்தும்.

நவீன் (தினக்கூலி தொழிலாளர்): ரூ.2,000 திரும்ப பெறப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எங்களை போன்ற சாதாரண மக்களிடம் பெரிய அளவில் அந்தப்பணம் புழக்கத்தில் இல்லை. எனவே இந்த பணத்தை மாற்றிவிட்டு, மீண்டும் ஆயிரம் ரூபாயை கொண்டு வர வேண்டும்.

செ.நா.ஜனார்த்தனன் (மாநிலத்தலைவர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்): இந்திய அரசு சரியாக திட்டமிடாமல் நவம்பர் 2016-ல் அறிமுகம் செய்த இந்த நோட்டுகள் தற்போது திரும்பப் பெறப்படும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் எப்போது எந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்படும்.

மருத்துவர் மு.அகிலன்: முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்தபணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும். குறுகிய காலத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x