Published : 20 May 2023 06:29 AM
Last Updated : 20 May 2023 06:29 AM

மதுரை மாநகராட்சியில் பல அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள்: காலி பணியிடங்களை நிரப்ப ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

சிம்ரன்ஜீத் சிங்

மதுரை: மதுரை மாநகராட்சியில் பல அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருவதால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிர்வாகப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. காலிப் பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மாநகராட்சி 3-வது மண்டலத்தில் நிர்வாக அலுவலராக ஆறுமுகம் பணிபுரிந்து வருகிறார். இவர் மைய அலுவலகத்தில் உதவி ஆணையர்(பணி) பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இதில், மாநகராட்சி ஆணைய அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையர்(பணி) பணியிடம் மிக முக்கியமானது. மாநகராட்சி அனைத்து நிலை பணியாளர்களின் ஊதியம், பதவி உயர்வு, பணியாளர்கள் வருகை பதிவேடு, பணியிட மாறுதல் போன்றவை தொடர்பான ஆவணங்களை தயார் செய்யும் பொறுப்புமிக்க பணி இது. இந்நிலையில், இரு பொறுப்புகளையும் சேர்த்து பார்ப்பதால் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல், மத்திய மண்டல ஆணையர் பொறுப்பை வகிக்கும் மனோகர், மாநகராட்சி மைய அலுவலக வருவாய்த் துறை உதவி ஆணையராகவும் உள்ளார். காலையில் மைய அலுவலகம் வரும் இவர், பிற்பகலில் மத்தியமண்டல அலுவலகம் செல்கிறார். வரி வசூலில் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால், மத்திய மண்டலப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

4-வது மண்டல நிர்வாக அலுவலராக இருக்கும் சுரேஷ், மாமன்ற செயலராகவும் உள்ளார். இதுபோல், பொறியியல் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளில் அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. காலியாக உள்ள முக்கிய பணியிடங்களுக்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்க ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநக ராட்சி அலுவலகத்தில் மைய அலுவலக கணக்குப் பிரிவில் 2 பேர், மாநகராட்சி ஆணையர் நேர்முக உதவியாளர் ஒருவர், ஓய்வூதியம் பிரிவில் ஒருவர், மண்டல அலுவலகங்களில் 5 பேர் என மொத்தம் 9 நிர்வாக அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உதவி ஆணையர் பணி நிலையில் நியமிக்கலாம். இதன் மூலம் ஒரே அதிகாரி 2 பொறுப்புகளில் தொடர்வதை தவிர்க்க முடியும். மாநகராட்சி நிர்வாகப் பணிகள் வேகமாக நடைபெற ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x