Published : 23 Oct 2017 05:50 PM
Last Updated : 23 Oct 2017 05:50 PM

பேரிடரில் உதவ நாங்கள் தேவை; போராட்டக் களத்தில் தடியடியா?- போலீஸார் மீது மீனவர் சங்கத் தலைவர் வேதனை

சென்னை பேரிடர்காலங்களில் மீனவர்களை நண்பன் போல் பயன்படுத்தும் போலீஸார், அதே மீனவர்கள் தொழில் பாதிப்புக்கு போராடும் போது தாக்குவது வேதனை அளிக்கிறது என்று மீனவர் சங்கத் தலைவர் பாரதி தெரிவித்தார்.

காசிமேடு, ராயபுரம் பகுதியில் சீன இன்ஜின் பயன்படுத்தும் படகுகளிலிருந்து இன்ஜின்களை அகற்ற வேண்டும் என்று போராடிய மீன்வர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 15 மீனவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து மீனவர் சங்கத் தலைவர் பாரதியிடம் 'தி இந்து' தமிழ் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

எதற்காக போராட்டம், திடீர் தடியடிக்கு என்ன காரணம்?

அமைச்சரின் தூண்டுதலின் பேரில்தான் தடியடி நடக்கிறது. அவரது விருப்பத்துக்கு நடக்கவில்லை என்றால் போலீஸை வைத்து கையாளுவது பொதுவாக அவரது வழக்கம், இன்றும் அதுதான் நடந்தது. ஏற்கெனவே பதினைந்து நாட்களுக்கு முன்னர் நல்லத்தண்ணி, ஓடக்குப்பம் பகுதியிலும் இதே போல் தான் நடந்தது.

அந்த மக்களின் பிரச்சினை பற்றி மாற்றுச்சிந்தனை இல்லாமல் அடித்து ஓடவிட்டார்கள். இங்கேயும் அமைச்சர் தூண்டுதல் தான் காரணம். காவல்துறை மீனவ மக்களின் பாதிப்பு, தொழில் செய்யும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். திடீர் என்று ஒரு நாள் எதையும் சொல்லாமல் நாங்கள் போராட்டம் நடத்தினால், தவறு என்று சொல்லலாம்.

இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக இருப்பது நன்றாகத் தெரியும். சீன இன்ஜின்களால் தொழில் பாதிப்பு ஏற்படுவதால், அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதைச் செய்யாமல் போலீஸை வைத்து பிரச்சினையை கையாளும் தவறான போக்கு தொடர்ந்து நடக்கிறது.

இதில் போலீஸின் மீனவ விரோத போக்குதான் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் வெள்ளம், புயல் என்று பேரிடர் காலத்தில் போலீஸாருக்கு முற்றிலும் நண்பனாக மீனவர்களை பயன்படுத்துகிறார்கள். மீனவர்களும் நட்போடு உதவி செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த சென்னையில் மீனவர்களை இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்திவிட்டு இப்போது அமைச்சருக்கு வேண்டியவர்கள், சில வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மீனவ மக்கள் மீதும் தடியடி நடத்துங்கள் என்றால், அதற்காக போலீஸார் தாக்குதலில் இறங்குவது வருத்தமாக இருக்கிறது.

சென்னையில் இதற்கு முன்னர் இது போல் நடந்தது இல்லை. தொடர்ந்து மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கிறது. நல்லத்தண்ணி ஓடக்குப்பம், பிரச்சினையை அடுத்து இது இரண்டாவது சம்பவம்.

விரைவில் இது சம்பந்தமாக அனைத்து மீனவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இன்றைய தாக்குதலில் மீனவப் பெண்கள் பலரின் மண்டை உடைந்துள்ளது. இது சம்பந்தமாக மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

மீனவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய நிறைய விஷயங்களுக்கு போலீஸார் பயன்படுத்துகின்றனர். ஆபரேஷன் ஆம்லா, புயல், மழை, கடலில் யாராவது விழுந்தால் மீட்பது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு மீனவர்களைப் பயன்படுத்துகின்றனர். இன்று மீனவர்கள் அவர்கள் தொழிலுக்காக போராடுகிறார்கள்.

இது அமைச்சரைப் பாதிக்கிறது என்பதற்காக போலீஸார் ஏன் எங்கள் மக்களைத் தாக்க வேண்டும். எங்கள் கோரிக்கைக்காக, கெஞ்சி கேட்டு பார்த்துவிட்டோம். ஏற்கெனவே நல்லதண்ணி, ஓடக்குப்பம் சிறிய பகுதியில் ஒடுக்கிவிட்டதால் இன்று இங்கு தடியடி நடத்தியுள்ளார்கள். இது சம்பந்தமாக விரைவில் புகார் அளிக்க உள்ளோம்'' என்று பாரதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x