Published : 25 Oct 2017 05:58 PM
Last Updated : 25 Oct 2017 05:58 PM
இலங்கை கடற்படை தளபதியாக இரண்டு மாதங்களே பணிபுரிந்த தமிழரான சின்னையா ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதிய கடற்படை தளபதியாக ரியல் அட்மிரல் ரணசிங்க (புதன்கிழமை) அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தொகையில் 15% தமிழர்கள் உள்ளனர். எனினும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக இலங்கை அரசு பதவிகளில் தமிழர்கள் தலைமை பதவிகளில் அரிதாகவே நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 47 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 18 அன்று தமிழரான ரியட் அட்மிரல் ட்ராவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா இலங்கை கடற்படையின் 21-வது தளபதியாக அதிபர் மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா ட்விட்டர் பக்கத்தில், ''ட்ராவிஸ் சின்னையா இலங்கை அரசுக்கு விசுவாசமாக பல ஆண்டுகள் நேர்மையாக பணிபுரிந்துள்ளார். தற்போது இலங்கை கடற்படை தளபதியாக பதவி ஏற்கிறார்" என்று பதிவு செய்திருந்தார்.
1982-ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் ட்ராவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா இணைந்தார். உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல இவரின் தலைமையில் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும் வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர உத்தம சேவா ஆகிய இலங்கை அரசின் உயர் விருதுகளையும் சின்னையா பெற்றுள்ளார்.
பின்னர் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணராக பணியாற்றினார். இலங்கையில் ராஜபக்சே ஆட்சி முடிவுற்றதும் மீண்டும் இலங்கை கடற்படையில் இணைந்ததும் அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதியின் கமாண்டராகவும் பணியமர்த்தப்பட்டார்.
சின்னையா இலங்கை கடற்படையின் தளபதியாக பதவியேற்றதும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ''கடற்படையின் மரபுகளை மீறி அமெரிக்கவின் பாதுகாப்பு நிபுணராக நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவரை தளபதியாக நியமித்திருப்பது இலங்கையின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்'' என கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் சின்னையாவின் பதிவுக்காலம் நீட்டிக்கப்படாமலேயே 55 வயதில் புதன்கிழமையுடன் ஓய்வு பெறுவதால் புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க அதிபர் மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 47 வருடங்களுக்கு பிறகு தமிழர் ஒருவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டு அவர் இரண்டே மாதத்தில் பதவியிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT