Published : 02 Oct 2017 07:33 AM
Last Updated : 02 Oct 2017 07:33 AM
இந்தியாவிலே முதன்முறையாக மழைநீரை சேகரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில் ரூ.1 கோடியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான கீழ்நிலைத் தொட்டி சென்னை தரமணியில் கட்டப்படுகிறது.
இத்தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் அங்குள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை யைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக “வாட்டர் ஏடிஎம்” என்ற கட்டமைப்பும் உருவாக்கப்படுகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நகரின் பல பகுதிகளில் பிரமாண்டமான கீழ்நிலைத் தொட்டி கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் முதல்முறையாக சென்னை தரமணியில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ஜப்பான் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான கீழ்நிலைத் தொட்டி கட்டப்படுகிறது. ரூ.1 கோடியில் கட்டப்படும் இத்தொட்டி கட்டுமானப் பணிக்கு முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இத்தொட்டி, 92 அடி நீளத்திலும், 37 அடி அகலத்திலும், 10 அடி ஆழத்திலும் கட்டப்படுகிறது. தொட்டிக்குள் 2 அடிக்கு ஒன்று வீதம் 600 பிளாஸ்டிக் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் தூண்களின் அடிப்பகுதி மற்றும் மேல்பகுதி ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 36 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் பெய்யும் மழைநீர் இத்தொட்டியில் சேகரிக்கப்படும்.
“பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட்டில் கட்டப்படுவதால் வேகமாகவும், உறுதியாகவும் கட்ட முடிகிறது. அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் தொட்டியைக் கட்டிமுடித்து, வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும்” என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், “சென்னை தரமணி பொதுப்பணித் துறை வளாகம் 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு 250 பேர் பணியாற்றுகின்றனர். ஒருவருக்கு தினமும் 45 லிட்டர் தண்ணீர் தேவை. ஓராண்டில் விடுமுறையைக் கழித்தது போக மீதமுள்ள 250 நாட்களுக்கு 27 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவைக்கொண்டு கணக்கிட்டால் இந்த வளாகத்தில் 46 லட்சம் லிட்டர் மழைநீர் கிடைக்கிறது. வறட்சி காலமான 2004-ம் ஆண்டில் இங்கு 24 லட்சம் லிட்டர் மழைநீர் கிடைத்தது. தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீர், அலுவலகப் பயன்பாடு போக, அப்பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். இதற்காக “வாட்டர் ஏடிஎம்” என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வரும் நவம்பர் மாதம்முதல் செயல்படும் என்றார். இனி, இதுபோன்ற பிரமாண்டமான மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT