Published : 05 Oct 2017 10:39 AM
Last Updated : 05 Oct 2017 10:39 AM
கோவையில் சாலையில் குவியும் குப்பை மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கும் கழிவுநீரால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவி, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்ட, ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு அமைத்து, தீவிர நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதாரச் சீர்கேட்டால்தான் காய்ச்சல் பரவுவதாகவும், இதைத் தடுக்க அரசுத் துறைகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தும், பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.
டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், அனைத்துத் துறைகளும் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்
இது குறித்து மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மாணிக்கம் அத்தப்பகவுண்டர்‘தி இந்து’விடம் கூறியதாவது: சாக்கடைக் கால்வாய் மற்றும் பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் கொசுவால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகின்றன. எனவே, கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் உள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள கழிவுநீர் சேமிப்புத் தொட்டியில் காற்றுபுகாத வகையில் அடைத்துவிட வேண்டும். மேலும், அதில் உள்ள காற்றுக் குழாயிலிருந்து கொசு வெளியே வராத வகையில் வலையை வைத்துக் கட்ட வேண்டும். தங்களது இருப்பிடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காத வகையில், சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டியை (செப்டிக் டேங்க்) தற்போதுள்ள முறையிலிருந்து மாற்றி, பயோடைஜஸ்ட் முறையிலான தொட்டியை அமைக்க வேண்டும். அப்போது, கழிவுநீர் நிலத்தில் இறங்காது. அதில் உள்ள கெட்ட கிருமிகள் அழிந்து, வெளிவரும் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்கும். இந்த நீரை நேரடியாக தோட்டத்துக்கு உபயோகப்படுத்தலாம்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பயோடைஜஸ்ட் முறையிலான கழிவுநீர்த் தொட்டியை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள செப்டிக் டேங்க் கட்டுமான முறையைக் காட்டிலும், இதற்கு குறைந்த செலவே ஆகும்.
தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை பெய்யும்போது, பல்வேறு இடங்களிலும் மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கும். அப்போது, கொசுக்கள் மூலம், அதிக அளவில் நோய் பரவும். எனவே, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார்.
விழிப்புணர்வு அவசியம்
கோவை நுகர்வோர் அமைப்பு (சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்) தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, சிலர் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை பையில் எடுத்துச் சென்று, குப்பைத் தொட்டி அருகே வீசி எறிகின்றனர்.
இதனால் சாலையில்தான் குப்பை கொட்டிக் கிடக்கிறது. சாக்கடைக் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கொட்டுவதால், சாக்கடை அடைத்துக் கொண்டு, கழிவுநீர் தேங்குகிறது. சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் மக்களுக்கும் பங்கு உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், சுகாதாரம், உள்ளாட்சி உள்ளிட்ட துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கண்காணிப்பு மற்றும் தீவிர நடவடிக்கைக் குழுவை அமைத்து, உடனுக்குடன் குப்பை அகற்றப்படுகிறதா, சுகாதாரப் பணிகள் சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
சில பகுதிகளில் குப்பை அள்ளுவோர், அங்குள்ள வீடு, கடை உரிமையாளர்களிடம், பணம் கொடுத்தால்தான் குப்பையை அகற்றுவோம் என மிரட்டுகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி வரி வசூல் அலுவலகங்கள் உள்ளிட்ட, பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய அலுவலகங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.
வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக மக்கள் அனுப்பும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
சுகாதாரத் துறை துணை இயக்குநர் பானுமதி கூறும்போது, ‘கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை டெங்கு பாதிப்பு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT