Last Updated : 20 May, 2023 12:28 AM

 

Published : 20 May 2023 12:28 AM
Last Updated : 20 May 2023 12:28 AM

புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை - முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "2018 ஆண்டு கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்த ஒன்றரை ஆண்டில் பாஜக கூட்டு சதி செய்து காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை மாற்றினர். எடியூரப்பா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்தது. 40 சதவீத கமிஷன் ஆட்சி என்று ஒப்பந்தகாரர்கள் விமர்சனம் செய்தனர். சிலர் தற்கொலை செய்தனர். பாஜக ஆட்சியால் கர்நாடகாவில் வளர்ச்சி இல்லை.

கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார், சித்தராமையா சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மத்தியில் பாஜக ஆட்சியின் ஊழலை எடுத்துரைத்து நிரூபித்தனர். மாதம் ரூ.1000, 200 யூனிட் மின்சார இலவசம் பெண்களுக்கான இலவச திட்டங்களை ஏற்று மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.

தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றமும் சொல்லியுள்ளது. ஆனால் இடையில் கள்ளச்சாராய இறப்பு என்ற ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. மரக்காணத்திலுள்ள சில்லறை வியாபாரிகளுக்கு புதுச்சேரியில் இருந்து சாராயம் வந்துள்ளது. விநியோகம் செய்தவர்கள் புதுச்சேரிக்காரர்கள். புதுச்சேரியில் 20 ஆண்டாக 400 ஆக இருந்த மதுபான கடை 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதுக்கடை லைசன்ஸ் வாங்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கப்படுகிறது.

குடியிருப்பு, பள்ளிக்கூடம் பக்கத்தில் மதுக்கடைகள் அமைக்கப்படுவதால் புதுச்சேரியில் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் முதல்வர் ரங்கசாமிதான். காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் பொறுப்பு. புதுச்சேரியில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை மாமூல் பெற்று இதை கட்டுப்படுத்த தவறுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட தமிழக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.

ஆனால், புதுச்சேரியில் இருந்து மொத்த கள்ளச்சாராயத்தையும் தமிழக பகுதிகளுக்கு வியாபாரம் செய்வதால் புதுச்சேரி அமைச்சர்கள், முதல்வர் ராஜினாமா செய்ய வலிறுத்த அண்ணாமலைக்கு தெம்பு, திராணி இருக்கிறதா? பாஜக இரட்டை வேடம் போடுகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாநகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு உள்ளிட்டோர் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x