Published : 19 May 2023 11:57 PM
Last Updated : 19 May 2023 11:57 PM

அதிமுகவை சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறார் இபிஎஸ் - தருமபுரியில் வைத்திலிங்கம் ஆவேசம்

தருமபுரியில் நடந்த அதிமுக(ஓபிஎஸ் அணி) மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.

தருமபுரி: அதிமுகவை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கும் இபிஎஸ்ஸின் எண்ணம் நிறைவேற ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என ஓபிஎஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தருமபுரியில் தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று (வெள்ளி) அதிமுக(ஓபிஎஸ் அணி) கிழக்கு, மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் அரங்கநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியது: அதிமுக ஓபிஎஸ் தலைமையில் இயங்குவதைத் தான் தமிழகம் முழுக்க உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.

எனவே, எங்களுக்கு தமிழகம் முழுக்க சிறப்பான வரவேற்பு உள்ளது. அதிமுக சட்ட விதிகளின்படி கட்சிக்கான பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் உரிமை கட்சியின் தொண்டர்களுக்குத் தான் உள்ளது. இதற்கு முரணான வகையில், போலி பொதுக் குழு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விரோதமானது. நியாயத்துக்கும் புறம்பானது. நீதி நிச்சயம் எங்களுக்கு சாதகமாகத் தான் வரும் என நம்புகிறோம்.

ஜல்லிக்கட்டு தடை விவகாரம் கிளம்பிய பின் சட்டத்தின் மூலம் அனுமதி பெற்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தியபோது ஓபிஎஸ்சை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசினார். அதையெல்லாம் தற்போது அவர் மறந்து விட்டார். தற்போது அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு, புத்தியும் பேதலித்து விட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒருகாலத்தில் டிடிவி தினகரன் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்.

அதுமட்டுமல்ல, திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் அவர். தனிப்பட்ட முறையில் மக்கள் செல்வாக்கு இல்லாத அவருக்கு என்னை பற்றி விமர்சிக்க அருகதை இல்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. சின்னத்தையும், கொடியையும் நாங்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கூறவில்லை. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத் தான் வரும். அதுவரையும்கூட சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம்.

எல்லோரும் ஒன்றிணைவோம் என நாங்கள் வலியுறுத்துகிறோம். சசிகலா, டி.டி.வி.தினகரன், கே.சி.பழனிசாமி, அன்வர்ராஜா, ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி போன்றவர்கள் மட்டுமன்றி ஒதுங்கி நிற்கும் சாதாரண தொண்டன் வரை அனைவரும் ஒன்றிணைந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். ஒன்றுபடவில்லை என்றால் திமுகவை வீழ்த்த முடியாது.

ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு இதுகுறித்தோ, கட்சி நலன் பற்றியோ கவலையில்லை. கட்சிக்கு, தான் தலைமையாக இருக்க வேண்டும், கட்சி தனக்கு சொந்தமாக வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகிறார். அவர் எண்ணம் நிறைவேற ஒருபோதும் நாங்கள் விட்டுத்தர மாட்டோம். சட்டம், நியாயம், நீதியும் எங்கள் பக்கம் தான் உள்ளது. மக்கள் ஆதரவு மற்றும் தொண்டர்கள் ஆதரவும் எங்கள் பக்கம் தான் உள்ளது. எனவே, நாங்கள் தான் வெற்றிபெறுவோம், கட்சியை ஒன்றிணைத்து மீண்டும் ஆட்சிக்கு வருவோம்." இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x