Published : 19 May 2023 05:49 AM
Last Updated : 19 May 2023 05:49 AM
சென்னை: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உலகத்தரத்தில் ரூ.33.02 கோடியில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககாலப் பாண்டியரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை ஒரே இடத்தில் ‘பொருநை நாகரிகம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் திருநெல்வேலியில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 செப். 9-ம் தேதி சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமம்,மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள 5.276 எக்டேர் (13.02 ஏக்கர்) நிலப்பரப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது. இதில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவு அருங்காட்சியக மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். இந்நிலையில், 55,500 சதுர அடியில் ரூ.33.02 கோடி மதிப்பில் அமைக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்த அருங்காட்சியக வளாகத்தில் கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் நிர்வாகக் கட்டிடம் என 4 முதன்மைப் பிரிவுகள் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது. முற்றங்கள், நெடுவரிசைகள், தாழ்வாரங்கள் போன்றவற்றுடன் இப்பகுதியின் வட்டார கட்டிடக்கலைத் தன்மையை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள், முகப்புகளில் உள்ளூர் கலை மற்றும் கைவினைத் திறனின் கூறுகளைப் பயன்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நூல் வெளியீடு: தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மை மரபுகளை வெளிக்கொணரும் வண்ணம் புதுக்கோட்டை வட்டாரத்தில் காணப்படும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பேராசிரியர் கா. ராஜன், முனைவர்கள் வி.ப. யதீஸ்குமார், முத்துக்குமார் மற்றும் பவுல்துரை ஆகியோர் நூலாசிரியர்களாக இணைந்து எழுதிய ‘தமிழ்நாட்டு பண்பாட்டு மரபுகள் – புதுக்கோட்டை வட்டாரம்’ என்ற 2 தொகுதிகள் கொண்ட நூலைமுதல்வர் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறை யின் செயலர் க. மணிவாசன், தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT