Published : 19 May 2023 06:04 AM
Last Updated : 19 May 2023 06:04 AM
சென்னை: ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-வது பொதுக்குழு மற்றும் பொன்விழா மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக உள்ளது. சாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள், திமுகவில் தனித்தனியாக இயங்கி வந்த சங்கங்களைஇணைத்து மத்திய சங்கமாக உருவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அதற் கான குழு அமைத்து அக்குழு பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை என்ற அமைப்பு 1970-ல் உருவானது.
கடந்த 2001 முதல் தொமுச.வில் மு.சண்முகம் பொதுச்செயலா ளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சண்முகம் உள்ளிட்டோரின் செயல்பாட்டால்தான் 2008-ம் ஆண்டு தொமுச பேரவைக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. தொமுச பேரவை நடவடிக்கையால் 19 மாநிலங்களில் இணைப்பு சங்கங்கள் உருவாகியுள்ளன. ஒடிஸாவில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அம்மாநில அரசுசிறந்த தொழிற்சங்கமாக தொமுசவை தேர்வு செய்து பரிசு வழங்கியுள்ளது.
தொழிலாளர் நலன் மீது கவனம்: 1969-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும், தொழிலாளர் மீது தனி கவனம்செலுத்தி, தொழிலாளர் நலத்துறையை தனியாக பிரித்து, தனிஅமைச்சகத்தை உருவாக்கினார். அதே ஆண்டு மே 1-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நடைமுறைப்படுத்தியது கருணாநிதியின் சாதனை. பல தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம்பெறச் செய்தார். தொழிலாளர்களுக்கு பணிக்கொடை திட்டத்தையும், தொழில் விபத்து நிவாரணதிட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துடன், விவசாய தொழிலாளர், மீனவர், கிராம கோயில் பூசாரிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை சேர்த்து 36 அமைப்பு சாரா நலவாரியங்களை உருவாக்கியதும் திமுகவின் சாதனைதான்.
திமுக ஆட்சியில்தான் உடல்உழைப்பு தொழிலாளர் சட்டப்பிரிவில், பல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. போக்குவரத்து ஓய்வூதியம், பஞ்சப்படி வழங்கப்பட்டது. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரம் தந்தது திமுக அரசுதான். குறைந்த பட்ச போனஸ் 8.3 சதவீதம், அதிகபட்சம் 20 சதவீதம் என மத்திய அரசை அறிவிக்கச்செய்தது கருணாநிதி தான். அந்த வழியில்தான், திராவிடமாடல் அரசும் செயல்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலவாரியங்களில் கடந்த அதிமுக அரசு விட்டுச்சென்ற ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு, 6.71 லட்சம் பேருக்குநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கடை, நிறுவனங்களில் இருக்கை வசதி ஏற்படுத்த சட்டத்திருத்தம் செய்யப்பட் டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களைந்து ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரவை அமைப்பில்தான் 3 ஆண்டுகளுக் ஒருமுறை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது.
தொழிலாளர் தோழர்கள் தங்கள்உழைப்புடன் சேர்த்து உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்து.
நம் அரசு, தொழிலாளர் நலன் காக்க செய்துள்ள திட்டங்கள், சாதனைகளை அனைத்து தொழிலாளர்களிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், கடமையும் தொமுச தோழர்களிடம்தான் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து செயல்பட வேண்டும். உங்களின் ஒருவனாக என்றைக்கும் நான் இருப்பேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT