Published : 19 May 2023 06:20 AM
Last Updated : 19 May 2023 06:20 AM

கனிம வள உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவித்த திருப்பூர் ஆட்சியர்: இனிப்பு வழங்கி கொண்டாடிய விவசாய அமைப்பினர்

ஆட்சியர் சு.வினீத், கே.வள்ளல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே.வள்ளல் மீது விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். இந்நிலையில், அவரை பணியில் இருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக ஆட்சியர் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு கனிம வள உதவி ஆணையர், கண்காணிப்பு அதிகாரியால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுக்கூட்டங்களில் கே.எல்.கே.வள்ளல் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு புகார்கள் வந்த நிலையில், அந்த கூட்டங்களில் பங்கேற்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

பல்வேறு புகார்களுக்கும் உரிய பதில் இல்லாத நிலையில், அவர் அந்த பணியில் இருந்து கடந்த மே 17-ம் தேதி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக உதவி புவியியலாளர் சச்சின் ஆனந்த் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக மூத்த அதிகாரிகள் கூறும்போது, “முறைகேடான கல் குவாரிகளுக்கு கோடிக்கணக்கில் ஆட்சியர் அபராதம் விதித்தார். ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரின் தயவு இருந்ததால், ஆட்சியருக்கு கூட பதில் அளிக்காமல் கனிம வள உதவி இயக்குநர் இருந்துள்ளார். கடந்த ஆட்சியிலும், கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சரிடம் சொல்லி அவரை இடமாற்றம் செய்ய வைத்தார் அப்போதிருந்த ஆட்சியர். வள்ளல் மீதான புகார் கடிதத்தை, புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் ஜெயகாந்தனுக்கும், தொழில்துறை செயலருக்கும் ஆட்சியர் அனுப்பி உள்ளார்” என்றனர்.

ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பாராட்டி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் நேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சட்ட விரோத கல்குவாரி இயக்கத்தின் நிர்வாகி முகிலன் கூறும்போது, “கனிம வளத்துறை அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியரை பணிக்கு அமர்த்தி, அங்கு வரும் ஆவணங்களை சட்டவிரோதமாக கையாளக்கூடிய நிலை கடந்த காலத்தில் ஏற்பட்டது. கடந்த நவம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் அவரது அலுவலகத்துக்கே சென்று எச்சரிக்கை செய்த பின்பும், அவர் நடவடிக்கையில் மாற்றமில்லை. சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்ட அதிகாரியை பணியிலிருந்து விடுவித்த ஆட்சியரின் நடவடிக்கையை வரவேற்கிறோம்” என்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆட்சியர் சு.வினீத்தை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் கனிம வள உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கருத்து கேட்க கே.எல்.கே.வள்ளலை பலமுறை அலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x