Last Updated : 18 May, 2023 06:35 PM

18  

Published : 18 May 2023 06:35 PM
Last Updated : 18 May 2023 06:35 PM

தமிழகத்தில் மதமாற்றத்துக்கு முதல்வர் ஊக்கமளிப்பது போல செயல்படுவது சரியல்ல: விஎச்பி

மிலிந்த் பிராண்டே | கோப்புப்படம்.

புதுச்சேரி: தமிழகத்தில் நடக்கும் மதமாற்றத்துக்கு முதல்வர் ஊக்கமளிப்பது போல செயல்படுவது சரியல்ல என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் 72 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அமைப்பின் சார்பில் 7,500 திட்டங்கள் உலக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டியலினத்தவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். நாட்டில் 150 இடங்களில் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பின் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.

தேசிய உணர்வு, சுகாதாரம், உடல் பயிற்சி ஆகியவற்றை மையமாக வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் மகர சங்கராந்தி அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதில் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

நாட்டில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மதமாற்றம் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடந்து வருகிறது. அதற்கு முதல்வர் ஊக்கமளிப்பது போல செயல்படுவது சரியல்ல. மத்திய அரசு மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டாலும், மாநில அரசுகள் மனது வைத்தால்தான் மதமாற்றத்தை தடுக்க முடியும்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அரசியல் கட்சி அல்ல. ஆனால், கர்நாடகத் தேர்தலில் மக்கள் தேசப் பாதுகாப்புணர்வுடன் வாக்களித்திருக்க வேண்டும். தற்போது அங்கு இஸ்லாமியர்கள் சார்பில் துணை முதல்வர், 4 முக்கிய துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே, தேசிய உணர்வோடு மக்கள் வாக்களிப்பது அவசியம்'' என்றார். பேட்டியின் போது விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழகம், புதுச்சேரி தலைவர் ஆண்டான்சொக்கலிங்கம், புதுச்சேரி மாநிலத் தலைவர் ஞானகுரு ஆகியோர் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x