Published : 18 May 2023 06:30 PM
Last Updated : 18 May 2023 06:30 PM
சென்னை: பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ககன்தீப் சிங் பேடி, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம், சென்னை மாநகராட்சி கமிஷனராக கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர், பதவியேற்ற நாளில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள், கழிப்பறை பணிகள் உள்ளிட்டவற்றை நேரடியாக கள ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், ஆர்.ஏ.புரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களிடம் நேரடியாக சென்று, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில், "சென்னையில் உள்ள மக்களுக்கு பெரும்பாலான சேவைகளை மாநகராட்சியே மேற்கொண்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆய்வு கூட்டம் போன்ற கூடுதல் பணிகள் குறைக்கப்படும். அதனால், காலை, மாலை நேரங்களில் பகுதி வாரியாக அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தங்களை சந்தித்து புகார்களை தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். குறிப்பாக, பழைய கட்டட இடிக்கும் பணிகள் துவங்கி, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வரை பலரின் உதவியை பொதுமக்கள் நாடுகின்றனர். அவற்றை தவிர்த்து, பொதுமக்கள் கோரும் பணிகளை உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து முடித்து தர வேண்டும்.
அனைத்து அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து பணிகளிலும், கவுன்சிலர்களையும் ஈடுபடுத்த வேண்டும். குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்ற சேவை துறைகள் மேற்கொள்ளும் சாலை வெட்டு பணிகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் கழிப்பறைகள், நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பை, கட்டட கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தினசரி குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT