Published : 18 May 2023 01:56 PM
Last Updated : 18 May 2023 01:56 PM
கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மக விழா அன்று உள்ளூர் விடுமுறை என கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளதை ஒட்டி கும்பகோணம் எம்எல்ஏ வுக்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டு நன்றி தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகாமகமும், ஆண்டு தோறும் மாசி மக விழாவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, இங்குள்ள மகாமக, பொற்றாமரை குளங்கள், காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் வீடுகளுக்குச் செல்வார்கள்.
இந்த விழாவான மாசி மகத்தின் போது ஆயிரக்கணக்கானோரும், மாசி மகாமகத்தின் போது லட்சக்கணக்கானோரும் கூடுவார்கள்.
ஆனால், ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மக விழா அன்று, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, கடந்த 2017-ம் ஆண்டு முதல், இங்குள்ள பல்வேறு அமைப்பினர், தமிழக அரசிடமும், கும்பகோணம் எம்எல்ஏவிடமும் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 30-ம் தேதி சட்டப்பேரவையில் கும்பகோணம் எம்எல்ஏ, இது குறித்து கேள்வி எழுப்பியும், ஏப்ரல் 12-ம் தேதி தமிழக முதல்வரை நேரிடையாக சந்தித்தும் இது குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
இந்நிலையில், தமிழக அரசு கடந்த 16-ம் தேதி, கும்பகோணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக விழா அன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனை அறிந்த தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக் குழுத் தலைவர் ஆர்.கே.பாஸ்கர், தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளைச் செயலாளர் வி.சத்தியநாராயணன், கும்பகோணம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.கிரி, அகில பாரத இந்து ஆன்மீக பேரவை நிர்வாகிகள் என்.சுப்புராயன், இரா.கண்ணன், ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் நிர்வாகி எம்.கே.ஆர்.அசோக்குமார், அனைத்து தொழில் வணிகர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனுக்கு சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT